Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனி விழும் திகில் வனம்! (20)

பனி விழும் திகில் வனம்! (20)

பனி விழும் திகில் வனம்! (20)

பனி விழும் திகில் வனம்! (20)

PUBLISHED ON : ஜூன் 07, 2025


Google News
Latest Tamil News
முன்கதை: துணிவு மிக்க சிறுமி மிஷ்காவின் தந்தை துருவ் இமயமலையில் ஏறிய போது இறந்துவிட்டதாக தகவல் வந்தது. அதை ஏற்க மறுத்து, தந்தையை உயிருடன் மீட்க சென்றாள். எதிர்ப்புகளை மீறி உதவிய லக்பா என்ற பெண் துணைக்கு வந்தாள். அவளுடன் இமயமலையில் தந்தையை தேடி பயணத்தை துவங்கினாள் மிஷ்கா. இனி -

இரண்டு கைகளில், இரு ஸ்டிக்குகளை வைத்து பனிமலை ஏறினாள் லக்பா.

கால்கள் பனியில் புதைந்தன.

''மலையேறுவது உனக்கு எப்படி இருக்கிறது மிஷ்கா...''

''சறுக்கு மர பாதையில், பஞ்சு மெத்தை உச்சிக்கு ஏறுவது போலிருக்கிறது அம்மா...''

''நல்லதொரு உதாரணம்...''

''இந்த இமயமலை, 2,528 மாடிகள் உடைய உலகின் முதல் உயர வெள்ளை கட்டடமாய் காட்சியளிக்கிறது... நாம் எத்தனாவது மாடியில் இருக்கிறோம்...''

''எண்பதாவது மாடியில்...''

சுமை துாக்கும் ஷெர்பாக்களில் ஒருவன் சீன நாட்டுப்புற பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தான்.

அழுகுரலில் பாடியது மிஷ்காவின் நெஞ்சை பிசைந்தது.

''ஷெர்பா... உங்கள் குரல், தாயற்ற குழந்தைகளின் ஓலமாக ஒலித்தது...''

''நமஸ்தே...''

உடனிருந்த மூன்று ஷெர்பாக்களும், 'நமஸ்தே...' என கோரஸ் பாடினர்.

''ஷெர்பாக்களே... நீங்கள் அனைவரும் பணத்துக்காக தான், என்னுடன் மலையேறுகிறீர்களா...''

ஒரு ஷெர்பா இளைஞன் மறுத்தான்.

''நான் ஒருதலையாய் காதலிக்கும் பெண்ணின் அன்பை பெற மலையேறுகிறேன்...''

''நீங்கள் மலையேறியதும் உங்கள் காதலை ஏற்றுக் கொள்வதாக, அந்த பெண் கூறி இருக்கிறாளா...''

''ஆம்...''

''தமிழகத்தில், பழங்காலத்தில் பெண்களின் அன்பை பெற காளை மாட்டை அடக்குவர் ஆண்கள்... சீதையை மணமுடிக்க ராமர் வில் ஒடித்த கதை நமக்கு தெரியுமே...''

''வாலிப வயது பெண் போல பேசுகிறாய் மிஷ்கா...''

''கோடிக்கணக்கான தகவல்கள் கொட்டிக்கிடக்கும் பெருங்கடலில் நீந்தி களிக்கும் டால்பின் கூட்டம் நாம்...''

''மலையேற சிரமப்படுகிறாயா... மூச்சை ஆழமாக இழு. கால்களை நீளமாக போடு. உனக்கு தெரிந்த பாடல்களை உற்சாகமாக பாடு. உன் தந்தையை உயிருடன் கண்டுபிடித்து, கட்டிப்பிடித்து கொள்வது போல கற்பனையில் வாழ்...''

''அப்படியே செய்கிறேன் அம்மா...''

''அம்மா என என்னை கூப்பிடாதே... இன்னும் நெருக்கமாக லக்பா என கூப்பிடு. எனக்கும் வயது பத்தாகட்டும்...''

''லக்பா... என்னதொரு இனிமையான பெயர். உங்கள் இனிமையை உணர்ந்து தான், இந்த பெயரை உங்கள் பெற்றோர் வைத்திருக்கின்றனர்...''

சிரித்தாள் லக்பா.

''உன் பார்வை கீழ்நோக்கியே இருந்தால், நீ எப்போதும் வானவில்லை காணமுடியாது என்றார் சார்லி சாப்ளின். உலகின் எந்த மிருகமும் வானத்தை பார்ப்பதில்லை. மனிதன் ஒருவனே வானத்தை ரசிக்கிறான். நானும், நட்சத்திரங்களை பறித்து கூடையில் சேகரித்தபடியே இருப்பேன்...''

''பத்து டிகிரி படித்த அறிவு உங்களுக்கு இருக்கிறது லக்பா...''

''எல்லாமே அனுபவ அறிவு தான். என் கொடுமைக்கார கணவன் புற்றுநோயில் வீழ்ந்தபோது, காப்பாற்ற கடைசிவரை போராடினேன். பகைவர் மீதும் அன்பை வைக்கும் நல் உள்ளத்தை தந்தார் சாகர்மாதா...''

''லக்பா எனக்கு ஒரு ஆசை...''

''என்ன...''

''என் அப்பாவை உயிருடன் மீட்டு சென்னைக்கு திரும்பும் போது, நீங்களும் வந்து விடுங்களேன்... ராணி போல் பார்த்துக் கொள்கிறேன்...''

''என் நிலத்தை விட்டு ஓரடி நகரமாட்டேன் மிஷ்கா...''

பேசிக்கொண்டிருக்கும் போதே வானம் இருட்டியது.

காற்று பேய்த்தனமாய் சீறியது. பனிமலை பிளந்து வீறல் விட்டது.

இருநுாறு அடி பள்ளம் -

இரு நுனிகளுக்கு இடையே, அலுமினிய ஏணியை சாத்தி அதன் மேல் நடந்தனர்.

உச்சியிலிருந்து பனி சரிந்து உருண்டோடி கீழ் வந்தது.

மிஷ்காவின் கால் வழுக்கியது.

அப்படியே, 'கிடு கிடு' பள்ளத்தில் விழுந்தாள்.

முதுகு, புட்டம், பின்னங்கால்களை தேய்த்தபடியே அதளபாதாளத்தில் சரிந்தாள் மிஷ்கா.

சறுக்கலுக்கு பிறகு ஏழெட்டு முறை சாமர்சால்ட் அடித்தாள். ஹெல்மெட், 'னங்கார்' என மோதியது.

நீல வெண்மை நிறம் கண்களுக்குள் க்ளைடாஸ் கோப்பியது.

தொடர்ந்து சறுக்கியபடியே போனாள்.

பூமியின் மையப்பகுதி வரை வந்தது போல பிரமை கூட்டியது.

இப்போது அந்தரத்தில் சுழன்றாள்.

பின், பாதாளத்தின் அடிப்பகுதியில் 'சொத்' என விழுந்தாள் மிஷ்கா.

விழுந்த நொடி மயங்கிப் போனாள்.

எவ்வளவு நேரம் மயங்கி கிடந்தாளோ...

கண் விழித்த போது, எதிரே ரோமங்கள் அடர்ந்த இரு கால்கள் மட்டும் தெரிந்தன.

வீரிட்டாள் மிஷ்கா.



- தொடரும்... - மீயாழ் சிற்பிகா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us