Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனி விழும் திகில் வனம்! (2)

பனி விழும் திகில் வனம்! (2)

பனி விழும் திகில் வனம்! (2)

பனி விழும் திகில் வனம்! (2)

PUBLISHED ON : பிப் 01, 2025


Google News
Latest Tamil News
முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் என்பவர் மகள் மிஷ்கா. கற்பனை வளமும், நம்பிக்கையுடனான முயற்சியும் உடைய சிறுமி. உயர்ந்த மலைகளில் ஏறி சாதனை படைக்கும் தந்தைக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என கனவில் தோன்றிய தேவதையிடம் வரம் கேட்டதை கூறினாள். இனி -

''சென்டிமென்ட் இடியட்டாக யோசிக்காதே மகளே... நேரம் அதிகாலை, 5:00 மணியாகிறது. துாங்கியது போதும். எழுந்து காலை பணிகளை கவனிப்போம்...''

''சரிப்பா...''

இருவரும் சேர்ந்தே தரையை பெருக்கி சுத்தம் செய்தனர்.

''மகளே... உடற்பயிற்சி செய்யப் போகிறேன். நீ, நம் வளர்ப்பு செடிகளுக்கு தண்ணீர் ஊற்று...''

உடற்பயிற்சி முடித்து, குளித்து, புத்தாடை உடுத்தினான் துருவ்.

இருவரும் காலை உணவுக்கு தயாராயினர்.

'பேலியோ டயட்' கடைபிடிப்பவன் துருவ்.

ஓட்ஸ் கஞ்சியில், தயிர், சியா விதைகள், வெண்ணெய், தேன், காரட், பாதாம், முள்ளங்கி கலந்து குடித்தான்.

ஆனைக்கொய்யா பாதி பழத்துடன், முட்டைகளை ஹாப்பாயில் போட்டு சாப்பிட்டான்.

பிரட் சான்ட்விச் சாப்பிட்டு, சோயா பால் குடித்தாள் மிஷ்கா.

''உனக்கு சில அறிவுரைகள் அல்லது ஆலோசனைகள் கூறலாமா...''

''தாராளமா... சொல்லுங்கப்பா...''

''மனித வாழ்க்கையின் ஒன்பது அடிப்படை ஆதார விதிகளை சொல்கிறேன். கேள்...''

ஆர்வமாக கேட்டாள் மிஷ்கா.

''ஒன்று நிதானமாக வார்த்தைகளை சுய தணிக்கை செய்து பேசு. இரண்டு உன்னில் சகல திசைகளையும் உற்று நோக்கு. குறைவாக பேசு. யாரையும் எளிதில் நம்பி விடாதே. எப்போதுமே உன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து. சுயமாய் கற்றலை ஆயுளுக்கும் தொடர். நான் எனும் அகங்காரத்தை, இச்சைகளை, கோபதாபங்களை கட்டுப்படுத்து. புன்னகை முகமாய் இருந்து கவலைகளை சுட்டுத்தள்ளு. உலக உறவுகளில் குடும்பமே பிரதானம் என உணர். இந்த நவரத்தின செயல்பாடுகள் இருந்தால், வாழ்க்கை சொர்க்கமாகும்...''

முடித்தான் துருவ்.

''நீங்கள் கூறிய அனைத்தையும் பின்பற்றுகிறேன் அப்பா...''

முறுவலித்தாள் மிஷ்கா.

''என் அறிவுரையை உன் உடல்மொழி நேர்மையாக எதிர்கொள்வது மட்டற்ற மகிழ்ச்சி செல்லம்...''

''உங்கள் குரலில் எதை கேட்டாலும், எனக்கு தேவ வாக்கு தான் அப்பா...''

''உலகின் தலைசிறந்த ஆறு மருத்துவர்களை உனக்கு சொல்லவா...''

''சொல்லுங்கப்பா...''

''சூரிய வெளிச்சம், தேவையான ஓய்வு அல்லது துாக்கம், உடற்பயிற்சி, சரிவிகித சத்து உணவு, சுயமரியாதை, நல்ல நண்பர்கள்...''

''வாவ்...''

''அகங்காரம், பிறரிடமிருந்து கற்கும் நல்ல விஷயங்களை தடுக்கும். பொறாமை, உன் மீதான கவனக்குவிப்பை சிதறடிக்கும். முன்கோபம், தெளிவான பார்வையை மறைக்கும். அறியாமை, சிறப்பான முடிவுகளை எடுக்க விடாமல் தடுக்கும். பயம், வாய்ப்புகளை கெடுக்கும். இந்த நெகடிவ் விஷயங்களை தலை முழுகு...''

''அப்படியே செய்கிறேன் அப்பா...''

''அடுத்து சொல்லப் போவது மிக முக்கியமான விஷயம்...''

''சொல்லுங்கள்... அதையும் செய்கிறேன்...''

''வாழ்க்கையில் எந்த மனித உறவும், ஆயுளுக்கும் கூட வராது. எல்லாரும் வழிப்போக்கர் தான். உன், 1ம் வகுப்பு ஆசிரியை, உன் 2ம் வகுப்புக்கு ஆசிரியையாக வருவாரா... எட்டு ஆண்டுகளுக்கு முன், உனக்கு அம்மா இருந்தார்...

''அம்மா போனதும் நான் இருக்கிறேன். நாளை நான் போய் விட்டால், உன், 10 விரல்களும், மூளையும் தான், உனக்கு மூலதனம். இந்த உலகில் இருக்கப்போவது அதிகபட்சம், 70 ஆண்டுகள் தான். அதற்குள் வாழ்வில் ஒரு தங்க முத்திரை பதித்து விட வேண்டும். அது, 10 தலைமுறைக்கு தொடர வேண்டும்...''

''அப்படி சொல்லாதீங்கப்பா... என் வாழ்க்கையில் எது வந்தாலும், எது போனாலும் எனக்கு நீங்க வேணும்...''

கசப்பாய் சிரித்தாள் மிஷ்கா.

''நான் இப்படி பேசுவதற்கு ஒரு அவசர அவசிய காரணம் இருக்கிறது. அடுத்த வாரம் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு கிளம்புகிறேன். எவரெஸ்ட் சிகரத்தில், 31வது முறையாக ஏறி, இந்திய தேசியக்கொடி நடப்போகிறேன்...''

''என்னை, என்ன செய்யப் போறீங்கப்பா...''

''என்னம்மா இப்படி கேட்கிறாய்... நீ படிக்கும் பள்ளியின் விடுதியிலே விட்டு செல்கிறேன். உன் வங்கி கணக்கில், 50 லட்ச ரூபாயை நிரந்தர வைப்பு தொகையாக போட்டிருக்கிறேன். வட்டிப் பணம், படிப்புக்கும், வாழ்க்கைக்கும் உதவும். விடுதிக்கு, ஐந்து ஆண்டு பணம் செலுத்தி விட்டேன்...''

''என்னை விட்டு வெகுதுாரம் விலகி நிற்கப் போறீங்களாப்பா...''

''உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தினமும் ஒருமுறை உன்னுடன் பேசி விடுவேன். உனக்காக, ஐபோனும், மடிக்கணினியும் வாங்கி வைத்திருக்கிறேன். உபயோகரமாக பயன்படுத்து...''

கண்ணீர் கசிந்தாள் மிஷ்கா.

''எதற்கு அழுகிறாய் என் பளிங்கு குட்டி... எவரெஸ்ட் ஏறி முடித்ததும், ஊருக்கு பறந்து வந்து, உன்னை கட்டியணைத்து முத்த மழை பொழிவேன்...''

''இந்த முறை நீங்கள் எவரெஸ்ட் ஏறுவதற்கு எவ்வளவு செலவாகும் அப்பா...''

''குறைந்தது, 50 ஆயிரம் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ஏறக்குறைய, 40 லட்ச ரூபாய்...''

''அவ்வளவு பணம் எப்படி தயார் செய்வீங்க...''

''என் ஸ்பான்சர் தான் அனைத்து செலவுகளையும் ஏற்றிருக்கின்றனர்...''

''இந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவழிக்கலாமே... எவரெஸ்ட் ஏறுதல் அவ்வளவு முக்கியமா...''

நெட்டுயிர்த்தான் துருவ்.

''மலையேறுதல் ஒரு விளையாட்டு. அடங்காத காளையை அடக்குவது போல, மைனஸ் 60 டிகிரி சென்டிகிரேட் உச்சத்தை தொடுவது ஒரு பெரிய சவால். சாத்தியமில்லாததை போராடி சாதிப்பது மனித குணம்...

''ரெவின் ேஹால்டு மெஸ்னர், டென்சிங் நார்கே, அபா ெஷர்பா, எட்மன்ட் ஹில்லாரி, அங்க் காமி, அவ்தார் சிங் சீமா, பச்சேந்திரி பால், சந்திர பிரகாஷ் ஓரா, ஜார்ஜ் மல்லோரி, ஜிம் விட்டகர், நவாங் கோம்பு, வாங் புசோ, உய்ச்சிரோ ம்யூரா போன்று, நானும் உலக சாதனை புரிய விரும்புகிறேன். விண்வெளி ஆராய்ச்சி, ஆழ்கடல் ஆராய்ச்சி போன்று எவரெஸ்ட் சிகரத்தை வெல்லுதல் மகா முக்கியம்...''

''சிறுவர், சிறுமியர் எவரெஸ்ட் ஏறி இருக்கின்றனரா...''

''அக் ஷாரஜ் உதய்வல், ரித்விகா ஷர்மா, கான்டர்ப், சித்தி மிஸ்ரா, அரிஸ்கா லாத்தா போன்ற குட்டீஸ் எவரெஸ்ட்டின் அடிவார முகாம் வரை போயிருக்கின்றனர்...''

''அப்பா... நானும் உங்க கூட எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வரட்டுமா...''

ஆர்வமுடன் வினவினாள் மிஷ்கா.



- தொடரும்...

- மீயாழ் சிற்பிகா






      Our Apps Available On




      Dinamalar

      Follow us