Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நான்கு நண்பர்கள்!

நான்கு நண்பர்கள்!

நான்கு நண்பர்கள்!

நான்கு நண்பர்கள்!

PUBLISHED ON : ஏப் 19, 2025


Google News
Latest Tamil News
போளர் கிராமத்தில் அடர்ந்த காடு ஒன்று இருந்தது.

அங்கு, காகம், எலி, மான், ஆமை நட்புடன் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் -

மேய்ச்சலுக்கு சென்ற மான் திரும்பி வரவில்லை.

கவலையில் மானை தேடி புறப்பட்டது காகம். காட்டில் இங்கும், அங்கும் பறந்தது. கடைசியாக, மானை கண்டுபிடித்தது.

பாவம் மான்... வேடன் விரித்திருந்த வலையில் சிக்கி தவித்தபடி கிடந்தது.

அருகில் சென்று 'நண்பா... கவலைப்படாதே. உடனே எலியை அழைத்து வருகிறேன். வலையை அறுத்து, உன்னைக் காப்பாற்றி விடும்...' என்றது காகம்.

பின் அதிவேகமாக சென்று, முதுகில் எலியை ஏற்றி திரும்பி வந்தது.

ஆமையும் சோம்பியிருக்காமல் அவற்றின் பின்னாலே சென்று அந்த இடத்தை அடைந்தது.

காகம் உயரத்தில் பறந்து, வலை விரித்திருந்த வேடன் அங்கு வருகிறானா என கண்காணித்தது.

சற்று துாரத்தில் வேடன் வருவதைக் கண்டது.

உடனே எச்சரித்து, 'சீக்கிரம் வேலை நடக்கட்டும்...' என்றது காகம்.

வலையை அதிவேகமாக அறுத்தது எலி.

சிக்கியிருந்த மான் தப்பியது.

அமைதியாக அங்கு ஊர்ந்த ஆமையை பார்த்து விட்டான் வேடன். உடனே, 'மான் தப்பிவிட்டது... ஆமையாவது கிடைத்ததே.... இதை சமைத்து சாப்பிடலாம்' என எண்ணியபடி பிடித்தான். ஆமையை வில்லுடன் கட்டி துாக்கியபடி நடந்தான்.

இதை கண்ட நட்பு விலங்குகள் கவலையில் ஆழ்ந்தன.

தீவிரமாக யோசித்தது காகம்.

ஆமையை காப்பாற்ற வழி இருப்பதாக அதற்கு பட்டது. உடனே நண்பர்களிடம் ஒரு திட்டத்தை கூறியது. அதை நிறைவேற்ற அவை சம்மதித்தன.

வேடன் செல்லும் வழியில் ஒரு ஏரி இருந்தது.

அந்த ஏரிக்கரைக்கு குறுக்கு வழியில் நட்பு விலங்குகள் சென்றன.

திட்டப்படி, ஏரிக்கரையில் இறந்தது போல படுத்து நடித்தது மான். அதன் தலை பகுதியில் அமர்ந்து கொத்துவது போல, பாசாங்கு செய்தது காகம்.

சிறிது துாரத்தில் நின்று இதை வேடிக்கை பார்த்தது ஆமை.

வழியில் கிடந்த மானை பார்த்தான் வேடன். அதை உணவாக்கும் ஆசை எழுந்தது.

உடனே ஏரிக்கரையில் ஆமையை வைத்து மானை நோக்கி நடந்தான்.

வேடன் நெருங்கி வருவதை பார்த்ததும் கரைந்தபடி பறந்தது காகம். அதை கேட்டதும், சட்டென்று எழுந்து ஓடி தப்பியது மான்.

அதற்குள், ஆமையிடம் ஓடி வந்தது எலி. கட்டியிருந்த கயிற்றை அறுத்தது.

தப்பி பக்கத்திலிருந்த ஏரி தண்ணீருக்குள் இறங்கி ஒளிந்தது ஆமை. எலியும் புதருக்குள் ஓடி மறைந்தது.

ஏமாந்த வேடன் ஆமையை எடுக்க வந்தான். அங்கு அறுந்த கயிறும், வில்லும் தான் கிடந்தன. ஏமாற்றத்துடன் நடந்தான் வேடன்.

தப்பிய விலங்குகள் கூடி மகிழ்ந்தன.

பட்டூஸ்... விட்டு கொடுத்து, ஒற்றுமையுடன் செயல்பட்டால் எந்த காரியத்திலும் வெற்றி நிச்சயம்!

எம்.அசோக்ராஜா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us