Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கண்டு ஒன்று சொல்லேல்!

கண்டு ஒன்று சொல்லேல்!

கண்டு ஒன்று சொல்லேல்!

கண்டு ஒன்று சொல்லேல்!

PUBLISHED ON : ஏப் 05, 2025


Google News
Latest Tamil News
திருத்தங்கல் கோவில் அருகே இருந்தது அந்த அரசுப் பள்ளி. அங்கு படிக்கிறாள் மலர்; அன்று மிகவும் வாட்டத்துடன் இருந்தாள். அவளை சூழ்ந்தபடி, 'ஏன்டி இப்படி சோக கீதம் வாசிக்கிற...' என்றனர் தோழியர்.

''சாயுங்காலம் எப்படி வீட்டுக்கு போறதுன்னு கவலையா இருக்கு...''

'ஏன்... என்ன விஷயம்...'

ஆர்வமுடன் கேட்டனர் தோழியர்.

''வரும் போது, ரயில்வே கேட் பழுதாகி இருந்தது. சரி செய்ய மூன்று நாட்கள் ஆகும்னு, பேசிக்கிட்டாங்க...''

''அப்படியா... இன்னைக்கு வீட்டுக்கு, 3 கி.மீ., சுற்றி தான் போகணுமா...''

பதை பதைப்புடன் கேட்டாள் உடன் படிக்கும் கீதா.

இச்செய்தி, வேகமாக மாணவ, மாணவியர் மத்தியில் பரவியது.

அழைப்பு மணி கேட்டு வகுப்புக்கு சென்றனர் மாணவியர்.

சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, அந்த பள்ளிக்கு மாணவ, மாணவியர் வந்து சென்றனர். வழியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து, வந்து செல்ல வேண்டும். அதுதான் சுலபமான குறுக்கு வழி. போக்குவரத்துக்கு பெருமளவில் அது உதவியது.

அந்த ரயில்வே கேட் பழுதானதாக அறிந்ததால், மாணவ, மாணவியர் கவனம் சிதறியிருந்தது.

'மாலையில் எப்படி வீடு திரும்புவது'

அனைவர் மனதிலும், இதுவே ஓடி கொண்டிருந்தது.

மதியவேளை -

வகுப்புக்கு வந்த கணித ஆசிரியை, ''மாணவ மணிகளே... இன்று, வழக்கமான பள்ளி நேரத்துக்கு பின், சிறப்பு வகுப்பு நடக்கும். கணித பாடத்தில், சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். தவறாமல் கலந்துகொள்ளுங்கள்...'' என்றார்.

மாணவ, மாணவியர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

''என்ன... எல்லாரும் அமைதியா இருக்கீங்க... சிறப்பு வகுப்பு வேண்டாமா...''

'சிறப்பு வகுப்பு வேண்டும்; ஆனால், இன்றைக்கு வேண்டாம்; எங்க ஊருக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் பழுது பாக்குறாங்களாம்; அதை சரி செய்ய மூன்று நாளாகுமாம்... அதனால், வெகு துாரம் சுற்றியபடி வீட்டுக்கு போக நேரமாயிடும்...'

மாணவியர் ஒரே குரலில் கூறினர்.

''ரயில்வே கேட் பழுதாகி விட்டது என யார் கூறியது...''

ஒவ்வொருவரும் மற்றொருவர் பெயரை கூறி சுற்ற விட்டனர்.

கடைசியாக, மலர் பெயரில் முடிந்தது.

''உனக்கு நன்றாக தெரியுமா...''

மாணவி மலரை கேட்டார் ஆசிரியை.

''காலையில் பள்ளிக்கு வரும் போது, இரண்டு பேர் பேசிக்கிட்டாங்க... அந்த செய்தியை தான் கூறினேன்...''

''மதியம் அந்த பக்கமாக தான் வந்தேன்; ரயில்வே கேட் சரியாக வேலை செய்கிறது. பழுது ஏற்பட்டதாக பணி எதுவும் நடக்கவில்லை. போக்குவரத்து சீராக உள்ளது. எந்த தகவலையும் உறுதிபட தெரிந்த பின் கூற வேண்டும்; அரைகுரையாக காதில் வாங்கியதை பரப்பக்கூடாது...''

அறிவுரைத்த ஆசிரியை, அந்த தகவலின் உண்மை தன்மை பற்றி, ரயில்வே நிர்வாகத்திடம் விசாரித்தார். அது தவறான தகவல் என்பதை அறிந்து எடுத்துரைத்தார்.

மன்னிப்பு கேட்டபடி தவறை திருத்திக் கொண்டாள் மலர்.

அவளை தேற்றியபடி, ''முறையற்ற தகவல் பரப்புவோரை தான், பழந்தமிழ் புலவர் அவ்வையார், 'கண்டு ஒன்று சொல்லேல்' என குறிப்பிட்டு பாடியுள்ளார்...'' என விளக்கம் அளித்து, பாடம் புகட்டினார் ஆசிரியை.

குழந்தைகளே... எந்த தகவலையும் முழுமையாக அறிய முயற்சிக்க வேண்டும். தவறான எதையும் சொல்லக் கூடாது!

பா. செண்பகவல்லி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us