Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (300)

இளஸ் மனஸ்! (300)

இளஸ் மனஸ்! (300)

இளஸ் மனஸ்! (300)

PUBLISHED ON : மே 03, 2025


Google News
Latest Tamil News
அன்புள்ள அம்மா...

என் வயது, 32; இல்லத்தரசியாக இருக்கிறேன். எனக்கு, 10 வயதில் மகள் இருக்கிறாள். பிரபல பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறாள். எங்கள் குடும்பத்தில், 60 வயதான என் அம்மாவும், 65 வயதான அப்பாவும் உடன் இருக்கின்றனர்.

என் அம்மா, பேத்திக்கு சதா அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார். ஒரு வாரமாக மகள் என்னிடம் ரகசியமாக முணுமுணுக்கிறாள்.

'நம்ம வீட்ல இருக்கிற பாட்டி யாரு... உங்கம்மான்னு சொல்லிக்கிறாங்க. உன்னோட அழகில ஒரு சதவீதம் கூட அவருக்கு இல்லை. நம்ம வீட்ல இருக்ற தாத்தாவிடம் அடிக்கடி குசுகுசுன்னு பேசிக்கிறாங்க. ரெண்டு பேரையும் அவங்கவங்க வீட்டுக்கு போகச் சொல்லுங்க...'

இவ்வாறு சொல்கிறாள். தகுந்த விளக்கம் கொடுத்தாலும் ஏற்க மறுக்கிறாள். என்ன செய்யலாம். நல்ல ஆலோசனை கூறுங்கள்.

இப்படிக்கு,

ஜெயசுதா ராமலிங்கம், மதுரை.



அன்புள்ள சசோதரி...

ஜெனரேஷன் ஆல்பா குழந்தைகள் தொழில்நுட்பம் சார்ந்தவர்கள். இருபது வயது வாலிப பெண்ணுக்கு தெரியும் விஷயங்கள் அனைத்தும் உன், 10 வயதுகுழந்தைக்கு தெரியும். பாட்டியின் தொணதொண அறிவுரைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட உன் மகள் உங்கள் உறவுமுறையை கலாய்க்கிறாள்.

பாட்டிதான் அம்மாவின் அம்மா என்று உன் மகளுக்கு தெரியாமலிருக்க, 5 சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது.

நான் சொல்வது போல செய்...

* உன் அம்மா சிறுமியாக இருந்த போது எடுத்த புகைப்படம்

* உன் அப்பா- அம்மா திருமண புகைப்படம்

* வாலிப வயது அம்மாவும் சிறுமியாக நீயும் சேர்ந்து நிற்கும் புகைப்படம்

* உன் திருமணத்தில் பெற்றோருடன் இருக்கும் புகைப்படம்

* உன் மகள் கைக்குழந்தையாய் உன் அம்மாவுடன் இருக்கும் ஒளிப்படம்.

இவை எல்லாவற்றையும் உன் மகளிடம் காட்டி கீழ்கண்டவாறு அறிவுரை சொல்...

மகளே! பழைய புகைப்படங்களில் என் அம்மா அதாவது உன் பாட்டி இளமையாக இருப்பதையும் ஏறக்குறைய உன் பாட்டி இப்போதைய என் சாயலில் இருப்பதையும் கவனி. உன் தாத்தாவும், பாட்டியும் திருமணம் செய்துதான் நான் பிறந்தேன்.

தாத்தாவும், பாட்டியும் கணவன் மனைவி உறவு முறை. அவங்க குசுகுசுன்னு தான் பேசிக்குவாங்க. பாட்டியும், தாத்தாவும் முதுமை அடைந்து விட்டனர். முதுமையில் தலைமுடி நரைக்கும்; வாய் பற்கள் விழும்; முகத்தில் சுருக்கங்கள் தோன்றும்; கண்பார்வை மங்கும்; கைகால் நடுங்கும்.

வாலிபம், குளிர்சாதனப்பெட்டியிலிருந்து எடுக்கும் ஐஸ்கட்டி போன்றது. கரைந்து கொண்டேதான் இருக்கும்.

எனக்கும், உனக்கும் ஒருநாள் முதுமை கண்டிப்பாக வரும்.

நீ பாட்டியை யார் என்று கேட்பதன் வழியாக உறவுமுறைகளை பரிகசிக்கிறாய்.

என் அம்மா எனக்கு நல்ல அறிவுரைகள் கூறி வளர்த்தாள்.

இன்று நன்றாக இருக்கிறேன்.

ஒரு பாட்டியாக என் அம்மா, பேத்தியாகிய உனக்கு அறிவுரை கூறி வளர்க்கிறாள். நீயும் நாளை நன்றாக இருப்பாய்.

உனக்கு அப்பா வழி தாத்தா, பாட்டி இருக்கின்றனர். அவர்களை யார் என்று கேட்டு விடாதே. ஒரு வீட்டில் தாத்தா, பாட்டி இருப்பது பெரும் பாக்கியம்.

நீ படித்து வேலைக்கு போய் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, இந்த பாட்டியின் அருமை, பெருமைகளை கூறுவாய். அவர்கள் உருவாக்கிய வீட்டில்தான் நாம் இருக்கிறோம்; வெளியேற்ற நமக்கு உரிமை இல்லை...

இவ்வாறு விளக்கமாக கூறு.

நீ சொன்னது முழுக்க உன் மகள் மனதில் ஆணியடித்தாற் போல பதியும்.

பின், அவள் பாட்டியை கலாய்க்க மாட்டாள். மீறி கலாய்த்தால் மனநல மருத்துவரிடம் உன் மகளை காட்டி சரி செய்வதற்கு வழிமுறைகளை பெற முயற்சிக்கவும்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us