PUBLISHED ON : மே 16, 2026

அண்டை நாடான இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ளது, தாமரைக் கோபுரம். இது, தாமரை மலரை ஒத்த அழகிய வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள், 2012 முதல் 2019 வரை, ஏழு ஆண்டுகள் நடந்து, திறப்பு விழா கண்டது. இக்கோபுர கட்டுமானத்துக்கு, 750 கோடி ரூபாய் செலவானது.
இது, தென் ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரமாக விளங்குகிறது. இந்த கோபுரம், 351.50 மீட்டர் உயரம் உடையது. பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை விட, இது உயரமானது.
இக்கோபுரத்தின் அடிப்பரப்பு மட்டுமே, 30,600 சதுர அடி உடையது. கம்பிகள் மற்றும் கயிறுகள் என, எந்த வித வெளி ஆதரவும் இல்லாமல் கட்டப்பட்ட, தென் ஆசியாவின் மிக உயரமான சுயதாங்கு கட்டமைப்பாக விளங்குகிறது. அத்துடன் ஆசியாவில், 11வது உயரமான கோபுரமாகவும்; உலக அளவில், 19வது இடத்தைப் பிடித்த உயரமான கட்டுமானமாகவும் உள்ளது.
கோபுரத்தின் உச்சியில் உள்ள தளத்தில் இருந்து, கொழும்பு நகரத்தின் அழகிய காட்சியை ரசிக்கலாம். இதற்கென, எட்டு 'லிப்ட்'கள் இயக்கப்படுகின்றன. இலங்கையின் பெருமைமிகு சின்னமாக திகழும் தாமரைக் கோபுரம், உலகெங்கும் சுற்றுலாப் பயணியரை பெருமளவு ஈர்த்து வருகிறது.
- வ.முருகன்
