PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

தொழில் புரட்சி துவங்கிய காலத்தில் இருந்து நம் வளிமண்டலத்தின் கரியமில வாயுவின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக சூழலியலாளர்கள் கூறுகிறனர். ஆனால், இன்றிலிருந்து 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இந்தப் பூமியை டைனோசர்கள் ஆட்சி செய்த காலத்தில், இன்று இருப்பதை விட 4 மடங்கு அதிகமான கரியமில வாயு நம் வளிமண்டலத்தில் இருந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கன் பல்கலை வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சில டைனோசர்களின் தொல்லெச்சத்தை ஆய்வுக்கு உட்படுத்தியது. அவற்றின் பல் எனாமல் சில வித்யாசமான ஆக்சிஜன் ஐசோடோப்புகளைக் கொண்டிருந்ததைக் கண்டறிந்தது.
ஒவ்வொரு மூச்சிலும் டைனோசர்கள் என்ன வகை ஆக்சிஜன் ஐசோடோப்புகளை சுவாசித்தன என்ற தகவலை இந்த எனாமல் தருகிறது. இதை வைத்து இவை வாழ்ந்த காலத்தில் சுற்றுச்சூழலில் அதிகமான கரியமில வாயு இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.
பழங்காலத்தில் பூமியின் தட்பவெப்பநிலை, வளிமண்டலம், சுற்றுச்சூழல் எவ்வாறு இருந்தன என்பதை ஆராயும் துறைக்கு 'பெலியோக்ளைமேடாலஜி' என்று பெயர். இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுக்கு மண்ணில் உள்ள கார்பனேட் உள்ளிட்டவை தான் பயன்படும்.
முதல்முறையாக தொல்லெச்சங்களையும் இந்த ஆய்வுகளில் பயன்படுத்த முடியும் என்ற உண்மையை டைனோசர் பல் எனாமல் குறித்த இந்த ஆய்வு உணர்த்திஉள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.