PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM

இயற்கையின் படைப்பில் ஒவ்வோர் உயிரினமும் ஏதோ ஒரு சிறப்பம்சத்தைப் பெற்றுள்ளது. அதுதான் அவற்றுக்கு உணவைத் தேடி உண்ணவும் பகைவரிடமிருந்து காத்துக் கொள்ளவும் உதவுகிறது. பிளமிங்கோ என்று அழைக்கப்படுகின்ற பூநாரைகள் அப்படியான ஒரு சிறப்பம்சத்தைப் பெற்றுள்ளது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட இந்தப் பறவை, பெரும்பாலும் கடல்களை ஒட்டிய நீர் நிலைகளில் வாழும். ஆழமற்ற உப்பு நீர் ஏரிகளில் நின்று கொண்டு உணவைத் தேடி உண்ணும். இவை பொதுவாகக் கூட்டமாக வாழும்.
ஏரியில் வாழும் சிறு உயிரினங்கள் தான் இவற்றின் உணவு. இவை நீரில் மிதந்து வரும் உயிரினங்களை அப்படியே பிடித்து உண்கின்றன என்று தான் விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய அறிவியல் அகாடமி மேற்கொண்ட ஆய்வில் இவற்றின் புத்திசாலித்தனம் தெரியவந்துள்ளது.
பொதுவாக இவற்றின் உணவு ஏரிகளின் அடிப் பகுதிகளில் தான் இருக்கும். எனவே முதலில் இவை தங்கள் கால்களை மேலும் கீழுமாக அசைத்து நீரைக் கலக்குகின்றன. இதனால் அடியில் தங்கி உள்ள உயிரினங்கள் மேலே மிதக்கத் துவங்கும். உடனே தங்கள் 'ட' வடிவ அலகைக் கொண்டு நீரைச் சுழற்றி விடுகின்றன. இதனால் நீர்ச் சுழல் ஏற்பட்டு உயிரினங்கள் அதில் சிக்கிக் கொள்கின்றன.
அவற்றால் சுழலில் இருந்து தப்பிக்க முடியாது. இதைப் பயன்படுத்தி, பூநாரைகள் உணவை வேட்டையாடு கின்றன. விஞ்ஞானிகள் சில பூநாரைளைப் செயற்கையாக ஒரு நீர் நிலையில் விட்டனர். அவை எப்படித் தங்கள் உணவை வேட்டையாடுகின்றன என்று வேகமாகப் படம் பிடிக்கும் கேமராக்களைக் கொண்டு ஆராய்ந்தனர். அப்போதுதான் இவற்றின் புத்திசாலித்தனம் தெரியவந்தது.