Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/கட்டுமானத்தில் கடல் பாசி

கட்டுமானத்தில் கடல் பாசி

கட்டுமானத்தில் கடல் பாசி

கட்டுமானத்தில் கடல் பாசி

PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
வட அட்லான்டிக் பெருங்கடலின் ஒரு பகுதி சர்காசோ கடல். சர்காசம் என்பது இங்கு காணப்படும் ஒரு வகை கடல் பாசி. இது தற்போது பிரேசில் முதல் கரீபியன் வரையிலான வெப்ப மண்டல கடற்கரைகளில் ஆக்கிரமிப்பு உயிரியாகப் பரவி வருகிறது. துர்நாற்றம் வீசுகின்ற, விஷத்தன்மை கொண்ட இந்தப் பாசி அழுகும்போது, அமோனியா, மீத்தேன் போன்ற வாயுக்களை வெளியிடுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்குக் கேடு விளைகிறது. மீன்பிடித் தொழிலும், சுற்றுலாத் துறையும் பாதிக்கப்படுகின்றன.

வெறுமனே மண்ணில் புதைக்கப்பட்டு வீணாகும் இந்தப் பாசிகளை பயனுள்ள வகையில் உபயோகம் செய்யப் பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 2022ல், இந்திய தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி) விஞ்ஞானிகள் பாசிகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஒலித்தடுப்புத் தகடுகளை உருவாக்கினர். தற்போது, 'ஜர்னல் ஆப் மெட்டீரியல்ஸ் இன் சிவில் இன்ஜினியரிங்' என்ற ஆய்விதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு, இந்தக் கடல் பாசிகளைக் கொண்டு எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களை உருவாக்கலாம் எனக் கூறுகிறது.

கடல் பாசியைக் களிமண்ணுடன் கலக்கும்போது அது இலகுவாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், வெப்பத்தைத் தடுக்கும் தன்மையுடனும் மாறுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்தப் பாசி கலந்த களிமண்ணை கான்கிரீட்டில் பயன்படுத்தி, அதன் எடையைக் குறைக்கலாம். அத்துடன் சிமென்ட் தயாரிப்பில் சுண்ணாம்புக்கல்லுக்கு மாற்றாகப் பாசி சாம்பலைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் புதிய கட்டுமானப் பொருட்கள் வழக்கமான கட்டுமானப் பொருட்களைவிட சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, வெப்பமண்டலக் கடற்கரைகளில் கடல் பாசிகளால் ஏற்படும் பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us