PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM

01. எதிர்காலத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் மனிதர்கள் அங்கு நீண்டகாலம் தங்கி ஆய்வு மேற்கொள்ள வேண்டி வரும். அவர்கள் தங்குவதற்கான கட்டடங்கள் கட்ட இங்கிருந்து செங்கல், சிமென்ட் எடுத்துச் செல்ல முடியாது. நிலவில் உள்ள மண்ணையே கட்டுமானத்திற்கு ஏதுவான கற்களாக மாற்ற வேண்டும். இப்படி மாற்றுவதற்குத் தேவையான வெப்பத்தை சூரிய வெப்பம் அல்லது அதிக ஆற்றல் கொண்ட லேசரிலிருந்து பெற முடியும். ஆனால் இவற்றுக்கு மாற்றாக, சில புதுமைகளைப் புகுத்தி மைக்ரோ அலைகளையும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர் கொரியப் பல்கலை ஆய்வாளர்கள்.
![]() |
02. சூரியனிலிருந்து வரும் புயல் நம் பூமியின் காந்த மண்டலத்தில் பட்டு துருவ ஒளிகள் போன்ற அழகிய ஒளிகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், இவை அதிக ஆற்றலுடன் பூமியைத் தாக்கினால் மின்சாரம் பயணம் செய்யும் கேபிள்களைச் சிதைக்கும் வாய்ப்பு உள்ளதாக, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
![]() |
03. கண்ணாடி வலிமையானது; ஆனால் வளையாதது. ஜெல் வளையும், ஆனால் வலிமையற்றது. இரண்டையும் இணைத்து கண்ணாடி ஜெல் ஒன்றை அமெரிக்காவின் வட கரோலினா பல்கலை உருவாக்கியுள்ளது.
![]() |
04. பல்வேறு பயன்பாடுகளுக்காக ட்ரோன்கள் பறக்கும்போது இடைவெளி குறைவான இடங்களில் அவை நுழைய வேண்டி வரலாம். அந்தச் சூழல்களில் தனது சக்கர இறக்கைகளை மடக்கிக் கொள்ளும் வகையிலான ட்ரோன்களை நார்வேயின் தொழில்நுட்பக் கழகம் வடிவமைத்துள்ளது.
![]() |
05. நம் பூமியின் வளிமண்டலம் போல் பசுமை இல்ல வாயுக்கள் ஏதேனும் கிரகங்களில் நிறைந்திருந்தால், அங்கு நம்மைப் போல் அறிவியல் வளர்ச்சி அடைந்த உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த வாயுக்கள் இயற்கையாக அதிகளவில் இருக்க வாய்ப்பில்லை.