PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM

மரபு சார் எரிபொருட்களான புதைப்படிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாகவே மரபு சாரா ஆற்றல்களான சூரிய ஆற்றல், காற்றாலை, நீர் மின் ஆற்றல் ஆகியவை பயன்படுகின்றன.
ஆனால், இவற்றில் பெரும்பாலும் ஏதேனும் ஒன்று தான் ஒரு சாதனத்தில் பயன்படுகிறது. ஆனால், சூரிய ஒளி, மழைத்துளி ஆகிய இரண்டில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் தாவர வடிவ புது சாதனத்தை அமெரிக்காவில் உள்ள போஸ்டன் வடகிழக்குப் பல்கலை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
இதில் உள்ள இலைகளில் டெப்லான், நைலான் நானோ நார்கள் ஆகியவை இருக்கும். காற்றடித்து இலைகள் அசையும் போது இவற்றுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு மின்னோட்டம் உற்பத்தி ஆகும். இதை தாமிர எலெக்ட்ரோட்கள் மின்சாரமாக மாற்றும்.
அதேபோல் மழைத்துளிகள் விழும்போது ஏற்படும் சலனமும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இப்படியாக உற்பத்தி ஆகும் மின்சாரத்தைக் கொண்டு 10 எல்.இ.டி., பல்புகளை எரிய வைக்க முடியும். சிறிய அளவில் வெற்றி பெற்றுள்ள இந்த சாதனத்தைப் பெரியளவில் செய்தால் முற்றிலும் புதுமையான வழியில் மின்சாரம் தயாரிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.