PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

புல்லட், குண்டுவெடிப்பின் சத்தத்தை கேட்டல் அல்லது தொடர்ந்து அதிக ஒலி இருக்கும் இடத்தில் பணிபுரிதல் ஆகிய காரணங்களால் ஏற்படுவது 'ஒலியால் ஏற்படும் செவித்திறன் இழப்பு' (Noise -induced hearing loss - NIHL). தொழில்மயமாக்கம் காரணமாகத் தொழிற்சாலைகள் பெருகுவதால் இந்தக் குறைப்பாடு பலருக்கும் ஏற்படுகிறது.செவித்திறன் மேம்படுத்தும் கருவிகள் பொருத்தலாமே அன்றி, இதைச் சரிசெய்யவே முடியாது என்று நம்பப்பட்டு வந்தது.
தற்போது சில சீன ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவத்தையும், குடல் வாழ் உயிரினங்கள் பற்றிய தற்போதைய மருத்துவ அறிவையும் இணைத்து, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர். அதிக ஒலியால் குடல் நுண்ணியிரிகள் நலிவடைகின்றன. அவற்றுள் சில S1PR2 உள்ளிட்ட சில வகை கொழுப்புகளை உற்பத்தி செய்கின்றன. இந்தக் கொழுப்பு தான் கேட்கும் திறனைக் காக்கிறது.
அயன் ஆக்ஸைட் நானோ துகள்கள் மீது செல்லுலோஸைப் பூசி எலிகளுக்கு வாய்வழியே கொடுத்தனர். இது குடலை அடைந்ததும் நல்ல நுண்ணுயிர்களை நலமடையச் செய்தது. இதனால் கேட்கும் திறன் மேம்பட்டது. இந்த மருந்து விரைவில் மனிதர்கள் மீது சோதிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.