PUBLISHED ON : ஜன 11, 2024 12:00 AM

பூமியில் சூரியனின் வெப்பத்தால் தண்ணீர் ஆவியாகி மேகமாகி, குளிர்ந்து மழையாகப் பெய்யும். ஆனால், பூமியிலிருந்து 880 ஒளியாண்டுகள் துாரத்தில் உள்ள ஒரு கோளில் இரும்பு மழை பெய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
அமெரிக்காவின் 'நாசா'வால் அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி பல்வேறு புதிய கோள்களின் படங்களை அனுப்பி உள்ளது.
2016ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது WASP-121-b எனப்படும் 'டைலோஸ்' கோள். நம் வியாழன் அளவுக்குப் பெரிதான இது, தன் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதனால், மிக வேகமாகச் சூரியனைச் சுற்றி வரும். அதாவது, இங்கு ஓர் ஆண்டு என்பது வெறும் 31 மணி நேரம் தான்.
2016, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் ஹப்பிள் தொலைநோக்கி தந்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கோள் பற்றிய பல விஷயங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இதன் ஒருபக்கம் எப்போதும் அதன் சூரியனை நோக்கியே இருக்கும் என்பதால் கடுமையான வெப்பம், அதாவது 1,877 டிகிரி செல்சியஸ் இருக்கும். ஒளி படாத மறுபுறம் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் காற்றழுத்த வேறுபாடு ஏற்பட்டு எப்போதும் சூறாவளி வீசிக்கொண்டே இருக்கும்.
இங்குள்ள மேகங்கள் நீராவியால் ஆனவை அல்ல, இரும்பால் ஆனவை. இரும்பு ஆவி நிலையில் இருந்து திரவ நிலையில் மழையாகப் பெய்யும். இப்படியான வித்தியாசமான சூழல் கொண்ட கோள் பற்றிய கண்டுபிடிப்பு அறிவியல் ஆர்வம் கொண்டவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.