Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/நாய்க்கு சைவம் நல்லதா?

நாய்க்கு சைவம் நல்லதா?

நாய்க்கு சைவம் நல்லதா?

நாய்க்கு சைவம் நல்லதா?

PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
சுற்றுச்சூழல், உயிரினங்கள் மீது கொண்ட அக்கறையால் உலகம் முழுதும் உள்ள மக்களில் பலர் சைவ உணவு முறையைப் (veganism) பின்பற்றத் துவங்கியுள்ளனர். இதனால் இறைச்சி உணவை விரும்பும் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு என்ன உணவு கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குத் தீர்வாக நாய்களுக்கான சைவ உணவுகள் சந்தைக்கு வரத் துவங்கி உள்ளன.

அசைவத்தில் உள்ள சத்து இதில் இருக்காது என்பது பொதுக் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் தான் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலை ஆய்வாளர்கள் ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டனர். அதாவது வழக்கமான இறைச்சி அடிப்படையிலான நாய் உணவுகளும், புதிதாகச் சந்தைக்கு வந்திருக்கும் தாவர அடிப்படையிலான நாய் உணவுகளும் ஊட்டச்சத்து அளவில் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை ஆராய்ந்தனர். இதற்காக 31 வெவ்வேறு நாய் உணவுகள் சோதிக்கப்பட்டன.

ஆய்வின் முடிவில், தாவர அடிப்படையிலான உணவுகள், இறைச்சி உணவுகளுக்குச் சமமான ஊட்டச்சத்தைத் தருவது தெரியவந்தது. அதாவது இரண்டிலும் புரதம், அமினோ அமிலம், கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள் ஒரே அளவில் இருந்தன. இருப்பினும், தாவர உணவுகளில் அயோடின், வைட்டமின் பி சற்றுக் குறைவாக இருந்தன. இவற்றை கூடுதல் 'சப்ளிமென்ட்டுகள்' மூலம் சரி செய்ய முடியும்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, முறையாகத் தயாரிக்கப்பட்ட தாவர அடிப்படையிலான நாய் உணவுகளில், மாமிச உணவுகளில் உள்ள அதே சத்துகள் இருக்கும். எனவே, நாய்களுக்குத் தாராளமாகக் கொடுக்கலாம். இந்த ஆய்வு எந்தவொரு நிறுவனத்தின் உதவியும் இன்றி நடத்தப்பட்டதால், அதன் முடிவுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை தான். வருங்காலங்களில் இந்த சைவ உணவுகள் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us