PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM

'ஐஸ் ஏஜ்' படத்தில் மிகப்பெரிய உருவத்துடன், உடல் முழுதும் ரோமத்தால் மூடப்பட்டு, நீளமான தந்தத்தை உடைய விசித்திரமான யானைகளைப் பார்த்திருப்போம். இது கற்பனை கார்ட்டூன் தான் என்றாலும், இப்படியான ராட்சத யானைகள் பூமியில் வாழ்ந்துள்ளன. இவற்றை மாமோத் என்று அழைப்பர். இவ்வாறான யானைகள் வாழ்ந்ததைப் பல்வேறு இடங்களில் கிடைத்த தொல்லெச்சம் மூலமே அறிந்துகொண்டோம்.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ளது ஸ்வான் பாயின்ட் எனும் இடம். இங்கு வெறும் 10 கி.மீ., இடைவெளியில் 3 இடங்களில் மாமோத்களின் தொல்லெச்சம் கிடைத்துள்ளன.
அதில் முக்கியமான ஒன்று, ஒரு பெண் யானையின் தொல்லெச்சம். அதன் மரபணுக்களை ஆய்வுசெய்த அலாஸ்கா பல்கலை ஆராய்ச்சியாளர்கள், அந்த யானை பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளனர்.
14,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த யானை தன் சிறு வயதில் குறிப்பிட்ட சிறிய பகுதியிலேயே உலாவி உள்ளது. தன் நடுத்தர வயதில் மொத்த 1,000 கி.மீ., நடந்துள்ளது. பொதுவாக இந்த யானைகள் 60 ஆண்டு காலம் வாழ்பவை. ஆனால், இந்தக் குறிப்பிட்ட யானையோ தன் 20வது வயதில் இறந்துள்ளது. இதன் சடலம் ஆதி மனிதர்கள் வேட்டையாடிய இடத்தில் கிடைப்பதால் இதுவும் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு இறந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.