Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/பவளப்பாறைகளுக்கு புத்துயிர் தரும் 'ஜெல்'!

பவளப்பாறைகளுக்கு புத்துயிர் தரும் 'ஜெல்'!

பவளப்பாறைகளுக்கு புத்துயிர் தரும் 'ஜெல்'!

பவளப்பாறைகளுக்கு புத்துயிர் தரும் 'ஜெல்'!

PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
கடல் வாழ் உயிர்களுக்கு முக்கியமான பவளப் பாறைகள் அழிந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை ஸ்கிரிப்ஸ் கடல்சார் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் ஒரு நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். கடற் பாசிகளால் ஆன 'ஸ்நாப்--எக்ஸ்' (SNAP--X) என்ற கூழ்மம்தான் (ஜெல்) அது. அக் கூழ்மம், பவளப்பாறைகளை நோக்கி பவள இளம் உயிரிகளை (Coral larvae) ஈர்க்கும் திறன் கொண்டது.

சிலவகை கடற்பாசிகள் இயற்கையாகவே பவள இளம் உயிரிகளைக் கவரும் வேதிப்பொருட்களை (Metabolites) வெளியிடுகிறது. இந்த முக்கியமான வேதிப்பொருட்களை விஞ்ஞானிகள் சிலிக்கா நானோ துகள்களுக்குள் குழைத்து, உயிரிகளுக்கு ஏற்ற திரவத்தில் (Biocompatible liquid) கலந்துள்ளனர். இக்கலவையைப் பவளப்பாறை மேற்பரப்புகளில் பூசி, புற ஊதா ஒளி (Ultraviolet light) பாய்ச்சும்போது, அது ஒரு நீர்க்கூழ்மமாக (Hydrogel) திடமாகிறது. இது ஏறத்தாழ ஒரு மாதம் வரை பாறைகளில் ஒட்டிக்கொண்டு, பவள இளம் உயிரிகளை ஈர்க்கும் சேர்மங்களை மெதுவாக வெளியிடுகிறது.

ஆரம்பகட்ட சோதனைகளில், ஸ்நாப்-எக்ஸ் கூழ்மம் பூசாத பவளப்பாறை பகுதிகளைக் காட்டிலும், பூசப்பட்ட பகுதிகளுக்கு 20 மடங்கு இளம் உயிரிகள் வந்து, தங்கி வளரத் துவங்கின. இது பவளப்பாறை மறுசீரமைப்புப் பணிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

தற்போது, காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளால் பவளப்பாறைகள் உலகெங்கிலும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. எனவே ஸ்நாப்-எக்ஸ் கூழ்மத் தொழில்நுட்பம், அவற்றை மீட்டெடுத்துப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த அறிவியல் வழிமுறையாக இருக்கும் என, கடல் உயிரி வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us