PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

அதிகரிக்கும் ஜனத்தொகையால் வளமான பகுதிகளிலேயே தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்றால், வறண்ட பகுதியில் நிலைமையை விவரிக்கத் தேவையில்லை.
தண்ணீருக்காக அங்கு பெரிய போராட்டமே நடக்கும். இங்கு காற்றிலுள்ள ஈரப்பதத்தைக் குடிநீராக மாற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறை பிரபலமாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்ஐடி) இப்படியான ஒரு புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.
பொதுவாகவே இந்த இயந்திரங்களில் நீர் உறிஞ்சும் பொருட்கள் அமைக்கப்பட்டிருக்கும். எம்ஐடி உருவாக்கிய இயந்திரத்தில் இதில் சில புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் இறகுகள் தாமிரத்தாலானவை.
அவற்றின்மீது ஜியோலைட் எனும் நீர் உறிஞ்சும் பொருள் பூசப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், 30 சதவீத ஈரப்பதமுள்ள காற்றிலிருந்து ஒரு நாளைக்கு 1 கிலோ ஜியோலைட் பூச்சு 1.3 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும். எனில் மொத்த இயந்திரத்தால் நாள் ஒன்றுக்கு 5.8 லிட்டர் தண்ணீரைப் பிரித்தெடுக்க முடியும்.
காற்றின் ஈரப்பதம் 80 சதவீதம் இருந்தால் 8.66 லிட்டர் நீர் கிடைக்கிறது. இதற்குப் பதிலாக வேறு உறிஞ்சு பொருட்களைப் பயன்படுத்தும் இயந்திரங்கள் 100 மி.லி. நீரை மட்டுமே பிரித்தெடுக்கின்றன.
எனவே இந்தப் புதிய இயந்திரம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நீரைப் பிரிக்க 184 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படும். இதற்கு அதிக மின்சார ஆற்றல் வேண்டும். இது ஒரு முக்கியமான குறையாக உள்ளது.