PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM

குதிரை, மாட்டு வண்டிகளைப் பார்த்திருப்போம். ஏன் அவற்றின் மீது பயணம் கூட செய்திருப்போம். ஆனால், உலக வரலாற்றில் முதன்முறையாக நுண் பாசிகளை வண்டி இழுக்க வைத்துள்ளனர் விஞ்ஞானிகள். 10 மைக்ரோ மீட்டர் (1 மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) நீளம் மட்டுமே இருப்பவை இந்த ஒற்றைச் செல் நுண் பாசிகள்.
இவற்றால் ஒரு நொடிக்கு 100 மைக்ரோ மீட்டர் துாரம் பயணம் செய்ய முடியும். இவற்றால் இழுக்கப்படக்கூடிய அளவு மிகச் சிறிய வண்டிகளை ஜப்பானின் டோக்கியோ பல்கலை உருவாக்கியுள்ளது.
கிளாமிடோமோனாஸ் ரெய்ன்ஹார்ட்டி எனும் ஒருவகைப் பாசியைத் தொடர்ந்து கண்காணித்த விஞ்ஞானிகள் அவற்றின் வேகமான நீந்தும் ஆற்றல் கண்டு வியந்தனர்.
இவற்றால் சிரமம் இல்லாத வகையில் இழுக்கத்தக்க நுண் இயந்திரத்தை உருவாக்கினர். 7, 10, 13 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட மூன்று வளையங்களாலான சிறிய இயந்திரத்திற்குள் பாசியின் முழு உடலும் நுழையவில்லை. அவை தங்கள் நகர்வுக்குப் பயன்படுத்தும் ஃப்லாஜெலா (flagella) எனும் கொம்பு மட்டும் உள்ளே நுழைந்தது. இதனால் பாசி நகரும் போது உடன் இயந்திரமும் நகர்ந்தது. இந்த இயந்திரங்களை வெவ்வேறு விதமாக இணைத்துப் பார்த்தனர்கள். இரு பாசிகள், இரு குதிரைகள் வண்டி இழுப்பது போல் இழுத்தன.
நான்கு இயந்திரங்களைப் பொருத்திப் பார்த்தபோது நான்கு பாசிகள் வட்ட வடிவில் நொடிக்கு 20 - 40 மைக்ரோ மீட்டர் வேகத்தில் சுற்றத்தொடங்கின. இந்தப் பாசி வண்டிகளில் நாம் பயணம் செய்ய முடியாது. ஆனால், இவற்றை நீரில் உள்ள மாசுகளை அகற்றவோ, குறிப்பிட்ட சத்துகளை நீரில் சேர்க்கவோ பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.