PUBLISHED ON : ஜூன் 20, 2024 12:00 AM

உணவு அல்லது பணப்பயிர்கள் வளர்க்கப்படும் இடங்களில் தேவையில்லாமல் வளரும் செடிகள் 'களைகள்' எனப்படுகின்றன. இவை பயிர்களுக்குத் தேவைப்படும் சத்துக்களை எல்லாம் மண்ணில் இருந்து எடுத்துக் கொள்வதால், பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதற்காகத் தான் அவற்றை அவ்வப்போது நீக்குகிறோம். சில வகை களைகளை எவ்வளவு தான் நீக்கினாலும் திரும்பத் திரும்ப வளரும். இதற்கான காரணத்தை அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சா பல்கலை விஞ்ஞானி ரூபேஷ் கண்டறிந்துள்ளார்.
கிரேக்க நாட்டிற்கு சென்றபோது திராட்சைக் கொடிகளுக்கு இடையே வளரும் சில்வர்லீஃப் நைட்ஷேட் எனும் செடி பற்றி ஆய்வு செய்துள்ளார். திராட்சைகளுக்குத் தேவையான அத்தனை சத்துகளையும் உறிஞ்சிக்கொள்ளும் இந்தத் தாவரம் திராட்சைகளின் உற்பத்தியைப் பாதிக்கின்றன. பொதுவாக புல்லை வெட்டும் கருவி கொண்டு இவை வெட்டப்படுகின்றன. ஆனாலும் இவற்றை முழுமையாக அழிக்கவே முடியவில்லை.
ரூபேஷ் மேற்கொண்ட ஆய்வில் வெட்டப்படாத நைட்ஷேட் செடிகளை விட வெட்டப்படுவை தான் மிகவும் வேகமாக வளர்கின்றன என்பது தெரியவந்தது. அதாவது வெட்டப்படும் செடி உயிர் வாழ்வதற்குப் போராடுகிறது, இதனால் தனது வேர்களை ஆழமாக்குகிறது. புழுக்களால் உண்ணமுடியாதபடி தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. வெட்டப்படாத செடிகளில் உண்டு வளர்ந்த புழுக்களை விட வெட்டப்பட்ட செடிகளில் வளரும் புழுக்கள் அதிக எடை கொண்டிருந்தன.
இந்த ஆய்வின் மூலம் நைட்ஷேட் செடிகளைப் பொறுத்தவரை வெட்டப்படுபவையே ஆபத்தானவை என்று நிறுவப்பட்டுள்ளது. இது மற்ற களைச் செடிகளுக்கும் பொருந்துமா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.