/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ராஜ்யசபாவுக்கு செல்ல துடிக்கும் மகளிர் அணியினர்! ராஜ்யசபாவுக்கு செல்ல துடிக்கும் மகளிர் அணியினர்!
ராஜ்யசபாவுக்கு செல்ல துடிக்கும் மகளிர் அணியினர்!
ராஜ்யசபாவுக்கு செல்ல துடிக்கும் மகளிர் அணியினர்!
ராஜ்யசபாவுக்கு செல்ல துடிக்கும் மகளிர் அணியினர்!
PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

நாளிதழை மடித்தபடியே, “பெயின்ட் அடிச்சு மறைச்சிருக்காங்க...” என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
“என்னத்தை வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில் இருக்கிற திருமோகூர், புது தாமரைப்பட்டி பகுதி ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டடங்கள், ராஜாக்கூர் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி கட்டியிருந்தாங்க... இதுக்கான கல்வெட்டுகள்ல, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் ரகுபதியின் பெயரும் இருந்துச்சுங்க...
“அரசு நிதியில் கட்டிய கட்டடத்துக்கான கல்வெட்டுல தி.மு.க., நிர்வாகி பெயரை எப்படி எழுதலாம்னு, பா.ஜ., தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க... வேற வழியில்லாம, ரகுபதி பெயர் மீது பெயின்ட் அடிச்சு மறைச்சுட்டு, கல்வெட்டை திறந்து வச்சாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“காலி செக் தாங்கோன்னு கேக்கறார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்ல வரி வசூல் தீவிரமா நடக்கறது... இந்த நிதியாண்டுக்கான வசூலை, வர்ற 31ம் தேதிக்குள்ள முடிக்கணுமோன்னோ...
“இதனால, திண்டுக்கல் மாவட்டத்துல இருக்கற பேரூராட்சிகளிலும் வரி வசூல் வேகமா நடக்கறது... அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கவும், அவார்டு வாங்கவும் சில பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், தங்களது சொந்த பணத்தை போட்டு வரி கணக்கை முடிச்சு குடுக்கறா ஓய்...
“இன்னும் சிலர், ஊழியர்களின் சம்பளத்தை வாங்கி கணக்குல கட்டிட்டு, அப்பறமா வரிகள் வசூலானதும் தர்றதா சொல்லியிருக்கா... ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தொகுதி பக்கத்துல இருக்கற பேரூராட்சி அலுவலக அதிகாரியோ, சக பணியாளர்களிடம் கையெழுத்து போட்ட காலி செக்குகளை கேட்டிருக்கார் ஓய்...
“ஏன்னு கேட்டதுக்கு, 'வரி கணக்கை முடிக்க வட்டிக்கு பணம் வாங்கியிருக்கேன்... அவா பிணையா செக் கேக்கறா... அதனால, செக் தாங்கோ'ன்னு கேட்க, சக ஊழியர்கள் என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எம்.பி., பதவிக்கு மகளிர் அணியினர் போட்டி போடுதாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“எந்த கட்சியில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“தி.மு.க., மகளிர் அணி துணை செயலரா இருக்கிற அங்கையற்கண்ணி, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.,வா இருந்திருக்காங்க... 2021 சட்டசபை தேர்தல்ல சங்கராபுரத்துலயும், 2024 லோக்சபா தேர்தல்ல கள்ளக்குறிச்சியிலும் சீட் கேட்டிருந்தாங்க வே...
“அப்ப, 'அடுத்த முறை வாய்ப்பு தர்றோம்'னு தலைமை ஆறுதல் சொல்லி அனுப்பிட்டு... இப்ப, 'என்னை ராஜ்யசபாவுக்கு அனுப்பினா என் பேச்சு திறனை டில்லியிலும் வெளிப்படுத்துவேன்'னு தலைமையிடம் சொல்லி வாய்ப்பு கேட்கிறாங்க வே...
“அப்புறமா, சேலம் முன்னாள் மேயரும், மகளிர் அணி துணை செயலருமான ரேகா பிரியதர்ஷினியும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தியும் ராஜ்யசபா சீட் கேட்டிருக்காங்க...
“மறுபக்கம் அ.தி.மு.க.,வுல, நடிகையரான விந்தியா, காயத்ரி ரகுராமும், ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு தலைமையிடம், 'துண்டு' போட்டு வச்சிருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.