/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஆளுங்கட்சி ஒன்றிய செயலர்களுக்கு ' டெண்டர் ' அதிகாரம்! ஆளுங்கட்சி ஒன்றிய செயலர்களுக்கு ' டெண்டர் ' அதிகாரம்!
ஆளுங்கட்சி ஒன்றிய செயலர்களுக்கு ' டெண்டர் ' அதிகாரம்!
ஆளுங்கட்சி ஒன்றிய செயலர்களுக்கு ' டெண்டர் ' அதிகாரம்!
ஆளுங்கட்சி ஒன்றிய செயலர்களுக்கு ' டெண்டர் ' அதிகாரம்!
PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''படா கானா விருந்துக்கு கூப்பிடலைங்க...'' என, பெஞ்ச் தகவலை பேச துவங்கினார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு மாவட்டம், சிவகிரியில் முதிய தம்பதியை கொலை செய்த நாலு பேரை போலீசார் போன மாசம் கைது செஞ்சாங்களே... இந்த கும்பலுக்கு, கொங்கு மண்டலத்துல நடந்த பல கொலைகள்ல தொடர்பு இருப்பது தெரிய வந்துச்சுங்க...
''இந்த வழக்குல சிறப்பா பணியாற்றிய, 167 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, சமீபத்துல பெருந்துறையில் நடந்துச்சு... மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், கோவை டி.ஐ.ஜி., சசி மோகன், ஈரோடு எஸ்.பி., சுஜாதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கிட்டாங்க...
''இதுல, 'படா கானா' என்ற தடபுடலான அசைவ விருந்தும் போட்டாங்க... இந்த வழக்குக்காக, சிவகிரிக்கு தினமும் அலையா அலைஞ்ச பல போலீசாரை கூப்பிடலைங்க... அதேபோல, போலீஸ் அதிகாரிகள் பலரும், சென்னையில முதல்வரை பார்த்து வாழ்த்து வாங்கிட்டு வந்தாங்கன்னு ஏற்கனவே நாம பேசியிருந்தோமே...
''இதுல, இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய, திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் போலீசாரை கூப்பிடாமலே போயிட்டாங்க... 'முழுக்க முழுக்க ஈரோடு போலீசார் பேரை தட்டிட்டு போயிட்டாங்க'ன்னு திருப்பூர் மாவட்ட போலீசார் நொந்துக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஆளுங்கட்சியினரை மதிக்கலன்னு புலம்பறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை சார்புல, மாவட்ட அளவுல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு அமைக்கறது வழக்கம்... கோவையில, 2023க்கு பிறகு இந்த குழுவை அமைக்கல ஓய்...
''சமீபத்துல, குழு உறுப்பினராக விருப்பம் இருக்கறவாளிடம் மாவட்ட நிர்வாகத்துல இருந்து விண்ணப்பம் வாங்கினா... தி.மு.க., மாவட்ட செயலர்களான கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்துார் ரவி ஆகியோர், தங்களது ஆதரவாளர்களா தலா ஒருவரை உறுப்பினரா நியமிக்க கோரி, மேற்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜியிடம் பரிந்துரை கடிதம் குடுத்தா... அவரும், அதை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கார் ஓய்...
''ஆனா, மாவட்ட அதிகாரிகள், அந்த மூணு பேரையும் நிராகரிச்சுட்டு, தகுதி இல்லாத வேறு சிலரை நியமிச்சுட்டாளாம்... 'ஆளுங்கட்சியா இருந்தும் எங்க பேச்சுக்கு மதிப்பில்ல'ன்னு தி.மு.க.,வினர் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முழு அதிகாரம் குடுத்துட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருக்கு ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழகத்தில், கடந்த ஜனவரி 5ம் தேதியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிஞ்சிட்டுல்லா... இந்த சூழல்ல, சட்டசபை தேர்தல் வர்றதால, ஊராட்சி ஒன்றியங்கள்ல பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய அரசு முடிவு செஞ்சிருக்கு வே...
''இந்த பணிகளுக்கான டெண்டர்களை யார் யாருக்கு தரணும்னு முடிவு பண்ற அதிகாரத்தை, அந்தந்த ஒன்றிய செயலர்களுக்கு தலைமை குடுத்திருக்கு...
''அதோட, 'டெண்டர்ல கிடைக்கிற வருமானத்துல, கிளை கழக நிர்வாகிகளையும் கவனிச்சிக்கோங்க'ன்னும் சொல்லியிருக்காவ... இதனால, ஒன்றிய செயலர்கள் எல்லாம் உற்சாகமா இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.