/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஐ.ஏ.எஸ்., தம்பதி மீது ஆளுங்கட்சியினர் அதிருப்தி! ஐ.ஏ.எஸ்., தம்பதி மீது ஆளுங்கட்சியினர் அதிருப்தி!
ஐ.ஏ.எஸ்., தம்பதி மீது ஆளுங்கட்சியினர் அதிருப்தி!
ஐ.ஏ.எஸ்., தம்பதி மீது ஆளுங்கட்சியினர் அதிருப்தி!
ஐ.ஏ.எஸ்., தம்பதி மீது ஆளுங்கட்சியினர் அதிருப்தி!
PUBLISHED ON : மே 18, 2025 12:00 AM

நாளிதழை மடித்தபடியே, ''ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''நகராட்சி, மாநகராட்சி யில் இருக்கிற பில் கலெக்டர்கள், பெரும்பாலும் அந்த பகுதியை சேர்ந்தவங்களா தான் இருப்பாவ... போன வருஷ கடைசியில, 97 பில் கலெக்டர்களுக்கு அதிரடியா இடமாறுதல் போட்டாவ வே...
''உதாரணமா, நெல்லையில இருந்தவரை கோவை, திருச்சின்னு துாக்கியடிச்சுட்டாவ... இவங்க மறுபடியும் பழைய இடத்துக்கே மாறுதல் கேட்டப்ப, 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வசூல் பண்ணிட்டு, போட்டு குடுத்திருக்காவ வே...
''இந்த, 97 பேர்ல அஞ்சு பேர் ஆளுங்கட்சி செல்வாக்குல, பைசா செலவில்லாம, பழைய இடங்களுக்கு போயிட்டாவ... இன்னும், 42 பேர் ஆளுங்கட்சியினரை, 'கவனிச்சு' மாறுதல் வாங்கிட்டாவ வே...
''பொருளாதார பலம் இல்லாத மற்ற பில் கலெக்டர்கள், குடும்பத்தை பிரிஞ்சு புதிய இடங்கள்ல வேலை பார்த்துட்டு இருக்காவ... 'ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிக்க எங்களை பந்தாடுதாங்க'ன்னு கடும் கோபத்துல இருக்கிற இவங்க, 'இந்த முறை அ.தி.மு.க.,வுக்கு தான் ஓட்டு போடுவோம்'னு பகிரங்கமாவே சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''விசாரணைக்கு பிறகு தான் பதவி தருவாங்களாம் பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கோவை மாவட்ட தி.மு.க.,வுல, 30 வார்டுக்கு ஒரு ஒன்றியம் என்ற அடிப்படையில் பிரிக்க போறாங்க... இந்த வகையில, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்ல, புதுசா அஞ்சு ஒன்றியங்கள் உருவாக போகுது பா...
''இந்த ஒன்றியங்களின் செயலர் பதவியை பிடிக்க, பலரும் முட்டி மோதுறாங்க... ஆனா, தேர்தல் வர்றதால தி.மு.க., தலைமை உஷாரா இருக்கு... பதவி கேட்கிறவங்களோட பின்புலத்தை, தனியார் நிறுவனங்கள் மற்றும் உளவுத்துறையை விட்டு நல்லா விசாரிச்சுட்டு, ஒன்றிய செயலர்களை நியமிக்க இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஐ.ஏ.எஸ்., தம்பதி மீது அதிருப்தியில இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''விழுப்புரம் மாவட்டத்துல ஆளுங்கட்சிக்கு நாலு எம்.எல்.ஏ.,க்கள் இருக்கா... சமீபத்துல நடந்த கிராம சபை கூட்டங்கள்ல, முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்துக்கல ஓய்...
''விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன், அத்தியூர் கிராமத்திலும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, வேம்பை கிராமத்திலும், முன்னாள் அமைச்சர் மஸ்தான், செஞ்சியிலும் நடந்த கிராம சபை கூட்டங்கள்ல கலந்துண்டா... இந்த மூணு கிராம சபை கூட்டங்களுக்கும், பி.டி.ஓ.,க்கள் தான் போயிருக்கா ஓய்...
''தாசில்தார் அளவிலான அதிகாரிகள் கூட கலந்துக்கல... ஏன்னா, கலெக்டரும், கூடுதல் கலெக்டருமான அவரது மனைவி மற்றும் திண்டிவனம் சப் - கலெக்டர் ஆகிய மூணு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், மரக்காணம் ஒன்றியத்துல நடந்த கிராம சபை கூட்டத்துக்கு போயிட்டா... ஐ.ஏ.எஸ்.,கள் வர்றதால, வருவாய் துறையின் முக்கிய அதிகாரிகள் பலரும் அங்க ஆஜராகிட்டா ஓய்...
''இதனால, 'மூணு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் தனித்தனியா மூணு கிராம சபை கூட்டத்துக்கு போயிருக்கலாம்... ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு ஒருத்தராவது வந்திருக்கலாம்... தம்பதி சமேதரா ஒரே மாவட்டத்துல பணியில இருக்கறதால, அவா வைக்கறது தான் சட்டமா இருக்கு'ன்னு, ஆளுங்கட்சியினர் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.