Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ முதல்வர் மருந்தகத்தில் ரூ.40 லட்சம் முறைகேடு!

முதல்வர் மருந்தகத்தில் ரூ.40 லட்சம் முறைகேடு!

முதல்வர் மருந்தகத்தில் ரூ.40 லட்சம் முறைகேடு!

முதல்வர் மருந்தகத்தில் ரூ.40 லட்சம் முறைகேடு!

PUBLISHED ON : ஜூன் 17, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''போன சனிக்கிழமை, பெரம்பலுார்ல, 'வெப்சா'ங்கற பெயர்ல விதை சுத்திகரிப்பு நிலையம் அமைச்சவரு, அரசு மானியத்தைத் தவறா பயன்படுத்துறதா பேசினோம் இல்லையா... ஆனா அவர், நிஜமாவே தொழிற்சாலை அமைச்சு, விவசாயத்துக்கான உரம் தயாரிக்கிறது, கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கிறதுன்னு பெரிய அளவுல செஞ்சிட்டிருக்காரு பா... மானியத்தை முறையா பயன்படுத்திட்டு தான் இருக்காரு...'' என்ற அன்வர்பாய், பல லட்சம் ரூபாய் செலவு பண்ணியும், சும்மா வச்சிருக்காங்க பா...'' என்றார்.

''என்னத்த வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''விழுப்புரம் கலெக்டரும், கூடுதல் கலெக்டரும் கணவன், மனைவியா இருக்கிறதால, ரெண்டு பேருமே கலெக்டர் பங்களாவுலயே தங்கியிருக்காங்க... கூடுதல் கலெக்டருக்குரிய அரசு பங்களாவை புதுப்பிக்கிற பணியை, ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருத்தர், தனக்கு கீழே உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைச்சிருக்காரு பா...

''அவங்களும் அங்குமிங்கும் அலைஞ்சு, திரிஞ்சு பல லட்சம் ரூபாய் செலவு பண்ணி, பங்களாவை புதுப்பிச்சு முகாம் அலுவலகமாகவும் மாத்தி குடுத்துட்டாங்க... ஆனா, அதை இன்னும் பயன்படுத்தாமலே வச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''வேளாண் சுற்றுலா வுல முறைகேடு நடக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை எனும், 'அட்மா' திட்டப்படி, விவசாயிகளை வேளாண் துறையினர் வெளியூர்களுக்கு சுற்றுலா கூட்டிட்டு போவாங்க...

''இந்த திட்டத்துக்காக ஒதுக்குற நிதியில், திருப்பூர் மாவட்டத்தில் நிறைய முறைகேடு நடக்கு... அதாவது, ஒதுக்குறதுல 50 சதவீதம் தொகையை மட்டும் தான் செலவு செய்றாங்க... மீதியை சிலர், 'ஒதுக்கிட்டு' போயிடுறாங்க...

''இதுக்கு காரணமா, துறையின் பெண் அதிகாரியை தான் எல்லாரும் கைகாட்டுறாங்க... 'வட்டார அளவுல இருக்கிற வேளாண் அதிகாரிகளை கூட அந்தம்மா மதிக்கிறது இல்ல'ன்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

மொபைல் போனை பார்த்த குப்பண்ணா, ''சீதா மேடம் மெசேஜ் அனுப்பியிருக்காங்க...'' என்றபடியே, ''முதல்வர் மருந்தக திட்டத்துல பணம் பார்த்த அதிகாரி கதை தெரியுமோ ஓய்...'' எனக் கேட்டார்.

''யாரு வே அது...'' என கேட்டார், அண்ணாச்சி.

''தமிழகம் முழுக்க கூட்டுறவு சங்கங்கள் மூலமா, 'முதல்வர் மருந்தகம்' திறந்திருக்காளோல்லியோ... துாத்துக்குடி மாவட்டத்துல, 11 முதல்வர் மருந்தகங்களை கூட்டுறவு துறை மூலமும், ஒன்பது மருந்தகங்களை தனியார் மூலமும் திறந்திருக்கா ஓய்...

''மருந்துகள் வாங்க, 1 லட்சம் ரூபாயும், உள்கட்டமைப்புக்கு, 1 லட்சம் ரூபாயும் அரசு தரப்புல மானியமா வழங்கறா... 'குறைந்த தொகையில் தான் கட்டமைப்பு வசதி களை செய்யணும்'னு அரசு உத்தரவு போட்டிருக்கு ஓய்...

''ஆனா, கூட்டுறவு துறையின் 11 மருந்தகங்கள்லயும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்ததா போலி ரசீதுகள் தயார் பண்ணி, கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கு...

''உதாரணமா, ஒரு கடைக்கு சந்தை மதிப்புல 2 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிட்டு, 3 லட்சம் ரூபாய்க்கு பில்களை வச்சு, பல லட்சங்களை அதிகாரி ஒருத்தர் அள்ளிட்டதா சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''பாலமுருகன் இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us