Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ' கட்டிங் ' தராத கல் குவாரிக்கு பாதை அடைப்பு!

' கட்டிங் ' தராத கல் குவாரிக்கு பாதை அடைப்பு!

' கட்டிங் ' தராத கல் குவாரிக்கு பாதை அடைப்பு!

' கட்டிங் ' தராத கல் குவாரிக்கு பாதை அடைப்பு!

PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நண்பர்கள் நடுவில் அமர்ந்தபடியே, ''மாவட்ட செயலருக்கு, 'டோஸ்' விட்டிருக்காரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''கொங்கு மண்டல தி.மு.க., தேர்தல் பொறுப்பாளரா செந்தில் பாலாஜி இருக்காருல்லா... சமீபத்துல நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாரு வே...

''அப்ப, 'நாமக்கல் கிழக்கு மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட செயலர் ராஜேஷ்குமார் தான் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்துக்கிடுதாரு... ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான மதிவேந்தன், அவரது சொந்த தொகுதியான ராசிபுரத்துல நடக்கிற நிகழ்ச்சியில கூட கலந்துக்கிறது இல்ல'ன்னு நிர்வாகிகள் புகார் சொல்லியிருக்காவ வே...

''இதை கேட்டு அதிர்ச்சியான செந்தில் பாலாஜி, மாவட்ட செயலருக்கு டோஸ் விட்டிருக்காரு... அப்புறமா மதிவேந்தனை கூப்பிட்டு, 'நாமக்கல் மாவட்டத்தில் நடக்கிற எல்லா நிகழ்ச்சியிலும் நீங்க கலந்துக்கணும்'னு சொல்லியிருக்காரு வே...

''இதனால, இப்ப 2 லட்சம் ரூபாய் மதிப்புல துவங்குற சின்ன திட்டமா இருந்தாலும், மதிவேந்தன் கலந்துக்கிடுதாரு... ராஜேஷ்குமாரும் அடக்கி வாசிக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''புரமோஷன் தள்ளி போறதுன்னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''வணிக வரி துறை யில் உதவி கமிஷனர் புரமோஷன் வழங்க, சீனியாரிட்டி பட்டியல் தயாராகுது... இதுல, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடி நியமனத்துல வந்தவாளுக்கு முன்னுரிமை தந்து, பட்டியல் தயார் பண்ணியிருக்கா ஓய்...

''ஆனா, பணியில் சேர்ந்த நாள் அடிப்படையில் பதவி உயர்வு பட்டியலை தயாரிக்கணும்னு சிலர் வழக்கு போட்டு, நேரடி நியமன அலுவலர்களுக்கு எதிரா ஐகோர்ட் மதுரை கிளையில் தடையும் வாங்கியிருக்கா... இது சம்பந்தமா, சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில இருக்கு ஓய்...

''ஆனாலும், 136 உதவி கமிஷனர் காலியிடங்களை புரமோஷன் மூலம் நிரப்ப இருக்கா... இதுல, நேரடி நியமன அதிகாரிகளை சேர்க்க, 20 லட்சமும், விரும்பிய இடத்துக்கு, 30 லட்சம் ரூபாயும் வசூல் நடக்கறதாம்... இதே மாதிரி, வருவாய் துறையிலும் சீனியாரிட்டி பார்க்காம புரமோஷன் போடறதா புலம்பல்கள் கேக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''நிம்மதியா தொழில் பண்ண முடியல பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவுல, 60 ஏக்கர் நிலத்துல கல் குவாரி நடத்த ஒருத்தர் லைசென்ஸ் வாங்கியிருக்கார்... கற்களை வெட்டி வெளியே எடுத்துட்டு வந்தப்ப, ஆளுங்கட்சி ஒன்றிய புள்ளி, தன் ஆதரவாளர்களுடன் போய், ஒரு லாரி லோடுக்கு, 400 ரூபாய் கட்டிங் கேட்க, குவாரி உரிமையாளர் மறுத்துட்டாரு பா...

''இதனால கோபமான ஆளுங்கட்சி புள்ளி, குவாரியில் இருந்து லாரிகள் வெளியே வர முடியாதபடி, பொது பாதையில் சாலையை துண்டிச்சுட்டாரு பா... உரிமையாளர், உள்ளூர் போலீஸ் முதல் அமைச்சர் வரை புகார் குடுத்தும் பலன் இல்ல...

''இப்ப, 'கட்டிங் கொடு அல்லது 10 ஏக்கர் குவாரி நிலத்தை எனக்கு எழுதி கொடு'ன்னு ஒன்றிய புள்ளி மிரட்டுறதா, முதல்வருக்கு உரிமையாளர் கண்ணீர் கடிதம் அனுப்பியிருக்காரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

டீ கடை ரேடியோவில், இளையராஜா இசையில் ஒலித்த பாடலை ரசித்தபடியே நண்பர்கள் கலைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us