Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/சாலையை குறுக்காக கடக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்

சாலையை குறுக்காக கடக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்

சாலையை குறுக்காக கடக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்

சாலையை குறுக்காக கடக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்

PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே, நான்கு வழிச்சாலை சந்திப்பில் கனரக வாகனங்கள் குறுக்காக கடந்து செல்வதை தடுப்பதற்கு, நிரந்தரமாக கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் மைய பகுதியாக உளுந்துார்பேட்டை திகழ்கிறது.

சென்னையில் இருந்து உளுந்துார்பேட்டை வழியாக மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கார், பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி கடந்து செல்கின்றன.

செங்குறிச்சி டோல்கேட்டில் இருந்து, உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்துக்கு, நகர் ரயில்வே மேம்பாலம் வழியாக பஸ்கள் செல்வது வழக்கம். இதனால், மேம்பாலம் மற்றும் டோல்கேட் அருகே நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடந்தது.

இதனால், உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் இருந்து, நகர் ரயில்வே மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்வதை தடுக்க, முதல்கட்டமாக ஒருவழிப் பாதையாக போலீசார் மாற்றினர்.

சென்னையில் இருந்து வரும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லாமல், விருத்தாசலம் சர்வீஸ் சாலை, பஸ் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டன.

அதேசமயம், கார், மினி டெம்போ, வேன், ஆட்டோ, பைக் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள், டோல்கேட் அருகே நான்கு வழிச்சாலை சந்திப்பு, நகர் ரயில்வே மேம்பாலம் வழியாக பஸ் நிலையம் செல்ல அனுமதிக்கப்பட்டன.

அதற்கேற்ப, இலகுரக வாகனங்கள் சாலையின் குறுக்கே கடந்து செல்லும் வகையில் பேரிகார்டுகளை இடைவெளி விட்டு போலீசார் வைத்தனர்.

போலீசார் வைத்த பேரிகார்டுகளை நகர்த்திவிட்டு, பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்து, நகர் ரயில்வே மேம்பாலம் வழியாக பஸ் நிலையத்திற்கு செல்கின்றன.

இதன் காரணமாக, சிறு சிறு விபத்துகள் தொடர்ந்து நடந்து வந்ததால், பேரிகார்டுகளுக்கு பதிலாக சிறிய அளவிலான கான்கிரீட் கட்டைகளை போலீசார் வைத்தனர். இந்த சிறிய கட்டையையும் கனரக வாகன ஓட்டிகள் தள்ளிவிட்டு, நான்கு வழிச்சாலையின் குறுக்கே கடந்து செல்கின்றனர்.

எனவே, பெரிய விபத்து நடந்து விபரீதம் ஏற்படுவதற்கு முன், நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் வழியை நிரந்தரமாக மூடி, இடைவெளியின்றி தொடர் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைப்பதற்கு, அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us