Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'டீம்' நியமித்து வசூல் நடத்தும் வருவாய் துறை அதிகாரி!

'டீம்' நியமித்து வசூல் நடத்தும் வருவாய் துறை அதிகாரி!

'டீம்' நியமித்து வசூல் நடத்தும் வருவாய் துறை அதிகாரி!

'டீம்' நியமித்து வசூல் நடத்தும் வருவாய் துறை அதிகாரி!

PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நாளிதழை மடித்தபடியே, ''மீண்டும் போராட போறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''அரசு ஊழியர்களை சொல்றீங்களா...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''இல்ல... துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் ஒன்றியத்துல இருக்கிற கிராமத்தின் பஞ்சாயத்து செயலரா, 20 வருஷத்துக்கும் மேலா ஒரு பெண் இருக்காங்க... உள்ளூர் அமைச்சரின் உதவியாளருக்கு உறவினரா இருக்கிறதால, கிராம மக்கள் யாரையும் மதிக்கவே மாட்டேங்கிறாங்க பா...

''பொதுமக்கள் தர்ற மனுக்களையும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க... இதனால கடுப்பான கிராம மக்கள், பஞ்., செயலரை மாற்றக்கோரி, சில மாதங்களுக்கு முன்னாடி போராட்டம் நடத்தினாங்க... அவங்களிடம் பேச்சு நடத்திய ஒன்றிய அதிகாரிகள், 'கலெக்டரிடம் சொல்லி, அவங்களை இடமாறுதல் பண்ணிடுறோம்'னு சொன்னாங்க பா...

''ஆனா, இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கல... பஞ்., செயலரும் தன் நடவடிக்கையை மாத்திக்கல... இதனால, மீண்டும் போராட்டத்தை கையில எடுக்க கிராம மக்கள் முடிவு பண்ணியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''இசக்கியம்மா அக்கா... சாயந்தரம் நானே பேசுதேன்...'' என, மொபைல் போனில் பேசியபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''மறுபடியும் ஆக்கிரமிங்கன்னு துாண்டி விடுதாவ வே...'' என்றார்.

''என்ன சமாச்சாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''மதுரையில், 50 வருஷத்துக்கு முன்னாடி, பைபாஸ் சாலையை ஆறுவழி சாலையா மாத்தினாவ... இதனால, நகரின் நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்னு பார்த்தா, பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் இங்க கடைகளை திறந்துட்டு வே...

''இதனால, மக்கள் நடமாட்டமும், வாகனங்கள் பெருக்கமும் அதிகரிக்க, சாலையோர கடைகளும் நிறைய முளைச்சு, பைபாஸ் சாலை நெரிசல்ல சிக்கி தவிச்சிட்டு இருந்துச்சு... சமீபத்துல மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், பைபாஸ் சாலையில, 'ரோடு ஷோ' நடத்தினாருல்லா...

''இதனால, அத்தனை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளையும் அதிகாரிகள், 'அலேக்'கா துாக்கிட்டு போயிட்டாவ... இனி, போக்குவரத்து நெரிசல் இருக்காதுன்னு வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் நினைச்சாவ வே...

''ஆனா, 'வாங்கியே' பழக்கப்பட்ட ஆளுங்கட்சியினர், 'மறுபடியும் அங்கன கடைகளை போடுங்க... நாங்க பார்த்துக்கிடுதோம்'னு சில கடைக்காரங்களுக்கு துாபம் போட்டுட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''பங்கு சரியா வராட்டி, ருத்ரதாண்டவமே ஆடிடறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் இருக்கற தமிழ் கடவுள் பெயர் கொண்ட அதிகாரி, 3 லட்சம் ரூபாய் இல்லாம, புதிய பெட்ரோல் பங்க் அமைக்கறதுக்கு, என்.ஓ.சி., தர்றது இல்ல... பட்டா மாறுதல் உள்ளிட்ட நிலம் சம்பந்த மான மேல்முறையீடுகளுக்கும், 'ரேட் பிக்ஸ்' பண்ணி தான் வசூல் பண்றார் ஓய்...

''இவருக்காகவே, மாவட்டம் முழுக்க போய் வசூல் பண்றதுக்கு தனி டீமே இயங்கறது... தனக்கான பங்கை சரியா தராத தாலுகா அளவிலான அதிகாரிகளை, ஆய்வுக்கூட்டங்கள்ல வெளுத்து வாங்கிடறார்... 'பெரிய ஆபீசரா இருக்கறதால, இவர் மேல விஜிலென்ஸ் போலீசார் கைவைக்க மாட்டா... அந்த துணிச்சல்ல தான் அதிகாரி புகுந்து விளையாடறார்'னு துறைக்குள்ளயே பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us