Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 70 சாலைகள் சீரமைப்பு பணி முகலிவாக்கத்தில் துவக்கம்

70 சாலைகள் சீரமைப்பு பணி முகலிவாக்கத்தில் துவக்கம்

70 சாலைகள் சீரமைப்பு பணி முகலிவாக்கத்தில் துவக்கம்

70 சாலைகள் சீரமைப்பு பணி முகலிவாக்கத்தில் துவக்கம்

PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM


Google News
முகலிவாக்கம், சென்னை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது, மணப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைத்து, ஆலந்துார் மண்டலம் உருவாக்கப்பட்டது.

முகலிவாக்கம், மதனந்தபுரம் ஆகிய பகுதிகள் ஊராட்சிகளாக இருந்ததால், அங்கு பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்வாய், குடிநீர், தரமான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, முகலிவாக்கம் முழுதும் சாலைகள் தோண்டப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, அவ்வப்போது சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறை சார்பிலும் தோண்டி சேதப்படுத்தப்படுவது வழக்கமாக இருந்தது.

இதனால், அப்பகுதிவாசிகள் போக்குவரத்து சிக்கலில் தவித்து வந்தனர். மாநகர பேருந்து போக்குவரத்தும், சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, திட்டப்பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன.

இந்நிலையில், முகலிவாக்கம் பகுதியில், 70 தார் சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 2.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, 'கட்டர்' இயந்திரம் வாயிலாக சாலையை சமன்படுத்தும் பணி துவக்கப்பட்டது. இச்சாலைகள், மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள், அனைத்து சாலைகளும் முழுமையாக அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us