/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ உயர் அதிகாரிகளை மதிக்காத பெண் எஸ்.ஐ., உயர் அதிகாரிகளை மதிக்காத பெண் எஸ்.ஐ.,
உயர் அதிகாரிகளை மதிக்காத பெண் எஸ்.ஐ.,
உயர் அதிகாரிகளை மதிக்காத பெண் எஸ்.ஐ.,
உயர் அதிகாரிகளை மதிக்காத பெண் எஸ்.ஐ.,
PUBLISHED ON : மார் 21, 2025 12:00 AM

நண்பர்கள் மத்தியில் அமர்ந்ததுமே, ''தனியார் நிறுவனத்தின் அடாவடியை கேளுங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எங்க ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை ஆவடி பகுதியில் பல சாலைகள், வடிகால்கள் எல்லாம் ஆக்கிரமிப்புல சிக்கி இருக்குது... கவரப்பாளையம் டி.ஆர்.ஆர்., நகர் பக்கத்துல தனியார் கார் நிறுவனம், சி.டி.எச்., சாலையில் அத்துமீறி 10க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி வச்சிருந்துச்சு பா...
''இது சம்பந்தமா புகார்கள் வரவே, நெடுஞ் சாலை துறையினர், அந்த பகுதியில் கார்களை நிறுத்த முடியாதபடிக்கு மண்ணை குவிச்சு வச்சாங்க... ஆனா, சில நாட்கள்லயே, தனியார் கார் நிறுவனம் மண்ணை எல்லாம் அகற்றிட்டு, மறுபடியும் அங்க கார்களை நிறுத்திடுச்சு...
''தனியார் நிறுவனத்தின் அடாவடியை தட்டிக் கேட்க முடியாம நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கையை பிசையுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க., கோட்டையை தகர்க்க ஆட்டத்தை துவங்கிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''போன சட்டசபை தேர்தல்ல, மதுரை மாவட்டத்துல இருக்கிற 10 தொகுதிகள்ல, நாலு அ.தி.மு.க., வசம் போயிடுச்சு... இந்த முறை அதையும் பறிச்சுடணும்னு அமைச்சர் மூர்த்தி துடிக்கிறாருங்க...
''மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலரா இருக்கிற இவரிடம், ஏற்கனவே மூணு தொகுதிகள் இருந்த சூழல்ல, புதுசா மதுரை மேற்கு தொகுதியையும் குடுத்துட்டாங்க... இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வா, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு இருக்காருங்க...
''இந்த தொகுதியை தட்டிப் பறிக்க மூர்த்தி முடிவு பண்ணியிருக்காரு... இதுக்காக, மேற்கு தொகுதியில் ஆலோசனை கூட்டம், குறை கேட்கும் நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்துறாருங்க...
''சமீபத்துல, 40 இடங்கள்ல, 5 கோடி ரூபாய் மதிப்புக்கு அடிப்படை வசதிகளுக்கான பணிகளை துவக்கி வச்சாரு... அதே மாதிரி, அ.தி.மு.க., வசம் இருக்கும் மேலுார் தொகுதியிலும், 17 அடிப்படை வசதிகளுக்காக, 1.20 கோடி ரூபாய்க்கு திட்டங்களை துவக்கி வச்சிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பெண் அதிகாரி மிரட்டலால புலம்புதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழக போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க, சென்னையில் போலீஸ் அகாடமி இருக்குல்லா... இங்க, ஏ.டி.எஸ்.பி.,க் கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்துல, 30க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் இருக்காவ வே...
''இவங்க தினமும், அங்க எஸ்.ஐ.,யா இருக்கும் பெண் அதிகாரி முன் இருக்கிற வருகை பதிவேடு ரிஜிஸ்டர்ல கையெழுத்து போடணும்... அப்ப, உயர் அதிகாரிகள் தனக்கு வணக்கம் வைக்கணும், இன்ஸ்பெக்டர்கள் சல்யூட் அடிக்கணும்னு எதிர் பார்த்து, பெண் எஸ்.ஐ., பந்தாவா உட்கார்ந்தே இருக்காங்க வே...
''என்னமோ, அவங்க தான் அகாடமியின் முதல்வர் போல நடந்துக்கிடுதாங்க... தன்னை விட உயர்ந்த ரேங்க் அதிகாரிகளையே மரியாதை இல்லாம நடத்துதாங்க... எதுக்கு எடுத்தாலும், 'எஸ்.பி., சொன்னார்'னு அகாடமி எஸ்.பி., மேல பழியை போடுதாங்க வே...
''இதனால, 'ஏழு வருஷமா இதே இடத்துல இருக்கிற இவங்களை இடமாற்றம் செய்யணும்'னு பயிற்சி அதிகாரிகள் எல்லாம் புலம்பு தாங்க வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சொல்லுங்கோ கிருத்திகா...'' என, பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.