Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ரூ.60 லட்சம் கமிஷனை ' ஆட்டை ' போட்ட தி.மு.க., புள்ளி!

ரூ.60 லட்சம் கமிஷனை ' ஆட்டை ' போட்ட தி.மு.க., புள்ளி!

ரூ.60 லட்சம் கமிஷனை ' ஆட்டை ' போட்ட தி.மு.க., புள்ளி!

ரூ.60 லட்சம் கமிஷனை ' ஆட்டை ' போட்ட தி.மு.க., புள்ளி!

PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
“தோழர்களுக்குள்ளயே முட்டிக்கிட்டு நிற்கிறாங்க பா...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அன்வர்பாய்.

“கம்யூனிஸ்ட்களை தானே சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.

“ஆமா... திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி, தி.மு.க., வசம் இருக்கு... நகராட்சியில மார்க்சிஸ்ட் கம்யூ.,க்கு ரெண்டு கவுன்சிலர்கள், இந்திய கம்யூ.,க்கு ஆறு கவுன்சிலர்கள் இருக்காங்க பா...

“இதுல, இந்திய கம்யூ., கட்சியின் பெண் கவுன்சிலர் துணை தலைவரா இருக்காங்க... இந்திய கம்யூ.,காரங்க, ஆளுங்கட்சியை அனுசரிச்சு, 'வளமா' இருக்காங்க... இது, மார்க்சிஸ்ட் தரப்புக்கு சுத்தமா பிடிக்கலை பா...

“இதனால, 'நகராட்சி நிர்வாகத்துல துணை தலைவர் ஆதிக்கம் அதிகமா இருக்கு'ன்னு, கலெக்டரிடமே புகார் குடுத்திருக்காங்க... கம்யூ.,க்கள் பனிப்போரால கலக்கத்துல இருக்கிற தி.மு.க., தரப்பு, 'இவங்க பஞ்சாயத்தை தீர்த்து வையுங்க... இல்லன்னா தேர்தல் நேரத்துல சிக்கல் வரும்'னு ரெண்டு கட்சி தலைமைக்கும் வேண்டு கோள் விடுத்திருக்கு பா...” என்றார், அன்வர்பாய்.

“புரோக்கர்கள் போட்டு வசூல் பண்ணுதாவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“சேலம் காரிப்பட்டி, அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்ல, விவசாய மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள்ல, ராத்திரி நேரங்கள்ல சட்டவிரோதமா செம்மண், கிராவல் மண் வெட்டி கடத்துதாவ... இதுக்கு போலீசாரும் பச்சைக்கொடி காட்டிட்டாவ வே...

“குறிப்பா, காரிப்பட்டி ஸ்டேஷன் எல்லையில, மண் கடத்தலுக்கு தனியா புரோக்கர்களே இருக்காவ... இவங்க, தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டு மண் கடத்தவும், விற்பனைக்கும் உதவியா இருக்காவ வே...

“இவங்க வழியாதான், போலீசாருக்கும் மாமூல் போவுது... இதனால, காரிப்பட்டி, அனுப்பூர், மின்னாம்பள்ளி, பெரியகவுண்டாபுரம் பகுதிகள்ல எந்த குறுக்கீடும் இல்லாம மண் கடத்தல் லாரிகள் அணிவகுத்து போவுது வே...” என்றார், அண்ணாச்சி.

“அறிவாலயத்துல தீக்குளிக்க போறேன்னு மிரட்டியிருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.

“யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.

“சென்னை மாவட்ட தி.மு.க.,வுல, 'சின்ன அரசர்' மாதிரி வலம் வர்றவர், மாநகராட்சியிலும், 'பசை'யான பதவியில இருக்காருங்க... வேலை வாங்கி தர்றது, 'டெண்டர்' எடுத்து குடுக்கிறதுன்னு பல வழிகள்லயும் வசூலை குவிக்கிறாருங்க...

“இதுக்காகவே, கமிஷன் அடிப்படையில, கட்சி நிர்வாகி ஒருத்தரை கூடவே வச்சிருந்தாரு... இப்படி பல கோடி ரூபாயை சம்பாதிச்ச அரசர், கட்சி நிர்வாகிக்கு 60 லட்சம் ரூபாய் வரை கமிஷன் தராம, 'அல்வா' குடுத்துட்டாருங்க...

“கட்சி நிர்வாகி கேட்டதுக்கு, 'யாரிடம் கேட்கிறாய் கமிஷன்'னு, 'கட்டபொம்மன்' மாதிரி வசனம் பேசி திருப்பி அனுப்பிட்டாராம்... இதுக்கு இடையில, கட்சி நிர்வாகியிடம் பணம் கொடுத்த சிலருக்கு காரியம் ஆகாததால, அவர் மீது பலரும் போலீஸ்ல புகார் குடுத்துட்டாங்க...

“இதனால, வெறுத்து போயிருக்கிற நிர்வாகி, 'எனக்குரிய கமிஷன் தொகையை அரசர் தரலைன்னா, அறிவாலயத்துல போய் தீக்குளிச்சிடுவேன்'னு தன் ஆதரவாளர்களிடம் புலம்பிட்டு இருக்காருங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us