/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தி.மு.க., - எம்.பி.,யை காணாமல் தேடும் தொகுதி மக்கள்! தி.மு.க., - எம்.பி.,யை காணாமல் தேடும் தொகுதி மக்கள்!
தி.மு.க., - எம்.பி.,யை காணாமல் தேடும் தொகுதி மக்கள்!
தி.மு.க., - எம்.பி.,யை காணாமல் தேடும் தொகுதி மக்கள்!
தி.மு.க., - எம்.பி.,யை காணாமல் தேடும் தொகுதி மக்கள்!
PUBLISHED ON : ஜூன் 08, 2025 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சி யபடியே, ''பகிரங்கமா கண்டனம் தெரிவிச்சுட்டாருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருக்கு வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''ராஜ்யசபா தேர்தல்ல, இந்த முறை, தி.மு.க., கூட்டணியில் வைகோவை கழற்றி விட்டுட்டாங்கல்ல... இதனால, தி.மு.க., மீது அதிருப்தியில இருக்கிற ம.தி.மு.க., நிர்வாகிகள் பலரும், 'வர்ற சட்டசபை தேர்தல்ல தி.மு.க., கூட்டணியில் நீடிக்கிறது குறித்து மறுபரிசீலனை செய்யணும்'னு தலைமைக்கு வலியுறுத்திட்டு இருக்காங்க...
''கிருஷ்ணகிரி மாவட்ட ம.தி.மு.க., செயலரான பாலமுரளி ஒருபடி மேல போய், 'வைகோவுக்கு ராஜ்யசபா தேர்தல்ல வாய்ப்பு வழங்காத தி.மு.க.,வை வன்மையாக கண்டிக்கிறோம்'னு சமூக வலைதளங்கள்ல பதிவே போட்டுட்டாருங்க... அதுலயே, 'எதிர்வரும் காலங்கள்ல நாம் ஏன் கூட்டணியை மறுபரிசீலனை செய்யக்கூடாதுன்னு தொண்டர்கள் சார்பாக கேட்கிறேன்'னும் குறிப்பிட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தி.மு.க., அணியில் இருந்து வெளியே போனா, நஷ்டம் அவங்களுக்கு தான்...'' என்ற அன்வர்பாயே, ''திருமணங்களை நடத்தி, வம்புல மாட்டிக்கிட்டாரு பா...'' என்றார்.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அரபிக் கல்லுாரி ஒண்ணு இருக்கு... இதன் உரிமையாளர், பணம் சம்பாதிக்கிற நோக்கத்துல, மாற்று மத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறாரு பா...
''மதம் மாறி வர்றவங்களுக்கு காதல் திருமணம் செய்து வச்சு, அதுக்கு சான்றிதழும் தர்றாரு... சமீபத்தில், கோவையை சேர்ந்த ஒரு காதல் ஜோடிக்கு, அவங்க பெற்றோர் சம்மதம் இல்லாம, பணம் வாங்கிட்டு திருமணம் பண்ணி வச்சிருக்காரு பா...
''அறக்கட்டளை என்ற பெயர்ல பதிவு பண்ணி, கல்லுாரி நடத்துறதாகவும் புகார்கள் வந்திருக்கு... அங்க என்ன நடக்குதுன்னு உளவுத்துறை போலீசார் விசாரிச்சுட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மாயம்னு விளம்பரம் தராத குறையா தேடிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருங்க அந்த மக்கள் பிரதிநிதி...'' என பட்டென கேட்டார், அந்தோணிசாமி.
''பெரம்பலுார் லோக்சபா தொகுதி தி.மு.க., - எம்.பி.,யா இருக்கிறவர் அருண் நேரு... சீனியர் அமைச்சரான நேருவின் மகனான இவர், 'இங்க நான் ஜெயிச்சா, பெரம்பலுாரில் அலுவலகம் அமைத்து பணியாற்றுவேன்... எப்ப வேணும்னாலும் என்னை வந்து மக்கள் பார்க்கலாம்... ரயில் வசதி, சிறப்பு பொருளாதார மண்டலம் எல்லாம் கொண்டு வருவேன்'னு வாக்குறுதிகளை வண்டி வண்டியா அள்ளி விட்டார் ஓய்...
''ஆனா, ஜெயித்ததும் சில வாரங்கள் மட்டும் தொகுதியில நடந்த விழாக்கள்ல கலந்துண்டார்... அப்பறமா அவரை பார்க்கவே முடியல... இதுவரைக்கும் பெரம்பலுாரில் எம்.பி., ஆபீசும் திறக்கல ஓய்...
''எப்பவாவது பெரம்பலுார் வந்தாலும், இதே மாவட்டத்தை சேர்ந்த, நீலகிரி தி.மு.க., - எம்.பி.,யான ஆ.ராஜாவின் முகாம் ஆபீசுக்கு வந்துட்டு போயிடறார்... அங்க போய் எம்.பி.,யை பார்த்தா, ஆ.ராஜாவின் கோபத்துக்கு ஆளாகணும்னு கட்சியினர் அந்த பக்கமே போறது இல்ல ஓய்...
''அமைச்சர் நேருவின் மகனா இருக்கறதால அருணிடம் மனு குடுத்தா, காரியம் நடக்கும்னு தொகுதி மக்கள் நம்புறா... ஆனா, அவரை பார்க்கறதே குதிரைக்கொம்பா போயிடுத்து ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.