Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/தேர்தல் நிதி வசூலில் இறங்கிய, 'காம்ரேட்'கள்!

தேர்தல் நிதி வசூலில் இறங்கிய, 'காம்ரேட்'கள்!

தேர்தல் நிதி வசூலில் இறங்கிய, 'காம்ரேட்'கள்!

தேர்தல் நிதி வசூலில் இறங்கிய, 'காம்ரேட்'கள்!

PUBLISHED ON : பிப் 12, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''விண்ணப்பம் கொடுத்துட்டு, ரெண்டு வருஷமா காத்துட்டு இருக்காங்க பா...'' என்ற படியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை போலீஸ் நிர்வாகத்தை மூணா பிரிச்சு, ஆவடி, தாம்பரம் கமிஷனரகங்களை தனித்தனியா உருவாக்கினாங்கல்ல... வழக்கமா, மூணு வருஷம் ஒரே இடத்துல பணிபுரிந்தவங்களுக்கு, விருப்ப இட மாறுதல் தருவாங்க பா...

''அந்த வகையில, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே மூணு கமிஷனரகங்களில் உள்ள போலீசாரும், எஸ்.ஐ.,களும் விருப்ப மாறுதல் கேட்டு விண்ணப்பங்கள் குடுத்தாங்க... இதுல, போலீசார், சிறப்பு எஸ்.ஐ.,களுக்கு மட்டும் இட மாறுதல் தந்தவங்க, 35க்கும் மேற் பட்ட, எஸ்.ஐ.,க்களை கண்டுக்கலை பா...

''இப்ப, சென்னை கமிஷனரகத்தில் மட்டும் இட மாற்றத்திற்கான பட்டியல் தயார் பண்ணிட்டு இருக்காங்களாம்... மற்ற ரெண்டு கமிஷனரகத்திலும் எந்த வேலையும் நடக்காததால, எஸ்.ஐ.,கள் சலிப்புல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''தேர்தல் வியூகங்கள் கசிஞ்சிடுது வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''ஆளுங்கட்சியான தி.மு.க., லோக்சபா தேர்தலுக்கு தயாராகிட்டு இருக்கு... மக்களின் நாடித் துடிப்பு பத்தி உளவுத்துறை தரும் தகவல்களை வச்சு தான், தேர்தல் வியூகங்களை வகுத்துட்டு இருக்காவ வே...

''ஆனாலும், தி.மு.க., வின் தேர்தல் வியூகங்கள் அனைத்தும் உடனுக்குடன், அ.தி.மு.க.,வுக்கு போயிடுதாம்... ஏன்னா, அ.தி.மு.க.,வுல முக்கிய பொறுப்புல இருக்கிற சிலரின் உறவினர்கள், உளவுத்துறையில பணியில இருக்காவ வே...

''அவங்க வழியா, தேர்தல் வியூகங்கள் எதிரணிக்கு போயிடுது... அதனால, அப்படிப்பட்டவங்க யார், யார்னு பட்டியல் எடுக்கிற பணி நடக்கு... சீக்கிரமே, உளவுத்துறையில அதிரடி மாற்றங்கள் வரும்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''காம்ரேட்களை கண்டாலே தெறிச்சு ஓடுறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''திருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.,யா, இந்திய கம்யூ., கட்சியின் சுப்பராயன் இருக்காரு... மறுபடியும் இவருக்கே இந்த தொகுதியை, தி.மு.க., ஒதுக்கும்னு சொல்றாங்க...

''தேர்தலை சந்திக்க, காம்ரேட்கள் இப்பவே கடை கடையா நிதி வசூல்ல இறங்கிட்டாங்க... சுப்பராயனின் ஐந்து வருஷ சாதனைகளை நோட்டீசா அடிச்சு, கடைகள்ல குடுத்துட்டு, 'தேர்தல் செலவுக்கு நிதி தாங்க'ன்னு ரசீது புத்தகத்தை நீட்டுறாங்க...

''அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், சாலையோர வியாபாரி கள்னு பலரையும் பார்த்து, இரவு, பகலா நிதி வசூலிக்கிறாங்க... இதனால, பல கடைக்காரங்க, சிவப்பு கொடியை கண்டாலே தெறிச்சு ஓடுறாங்க...

''சில இடங்கள்ல, 'கடை ஓனர் வெளியூர் போயிருக்காரு'ன்னு ஊழியர்கள் சொன்னாலும், 'பரவாயில்லை, அவரது போன் நம்பரை கொடுங்க... நாங்க பேசிக்கிறோம்'னு காம்ரேட்கள் கிடுக்கிப்பிடி போடுறாங்க...

''நம்பரை கொடுத்தா ஓனர் திட்டுவாரு... கொடுக்காட்டி, காம்ரேட்கள் நகர மாட்டாங்க... இதனால, கடை ஊழியர்கள் பாவம், முழியா முழிக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

பேச்சு முடிய, பெரியவர்கள் நடையை கட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us