Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தேர்தல் வெற்றிக்கு திருமாவிடம் உதவி கேட்ட பா.ஜ., பிரமுகர்!

தேர்தல் வெற்றிக்கு திருமாவிடம் உதவி கேட்ட பா.ஜ., பிரமுகர்!

தேர்தல் வெற்றிக்கு திருமாவிடம் உதவி கேட்ட பா.ஜ., பிரமுகர்!

தேர்தல் வெற்றிக்கு திருமாவிடம் உதவி கேட்ட பா.ஜ., பிரமுகர்!

PUBLISHED ON : மே 30, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
''தரக்குறைவா பேசுதாருன்னு புலம்புதாவ வே...'' என்றபடியே, டீயை உறிஞ்சினார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மதுரை மாவட்ட சுகாதார அதிகாரியா இருக்கிற டாக்டர், அரசு டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் பண்ற சிறிய தவறுக்கெல்லாம், நேர்ல வந்து விளக்கம் தரணும்னு சொல்லுதாரு... மாவட்டத்தின் எந்த மூலையில் இருந்தாலும், சாயந்தரமா அதிகாரியை பார்த்து விளக்கம் சொல்ல வந்தாலும், மணிக்கணக்குல காக்க வைக்காரு வே...

''ஆய்வுக் கூட்டங்கள்ல, டாக்டர்களை, 'நீங்கல்லாம் மாடு மேய்க்கக்கூட லாயக்கில்ல'ன்னு திட்டுதாரு... வாராந்திர கூட்டங்களையும் ஆபீஸ் நேரம் தாண்டியும் நடத்துதாரு வே...

''என்னதான் உயர் பதவியில இருந்தாலும், டாக்டருக்கு படிச்சவங்களை இப்படி மோசமா திட்டுறது சரியில்லன்னு அவர் மேல மேலிடத்துக்கு வண்டி வண்டியா புகார்களை அனுப்பியிருக்காவ... அதிகாரியிடம் கேட்டா, 'என் கடமையை சிறப்பா செய்யுதேன்... அது பிடிக்காதவங்க பொய் புகார் சொல்லுதாங்க'ன்னு விளக்கம் தர்றாரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''குமரகுருபரன், டீ சாப்பிடுங்க...'' என, நண்பரை உபசரித்த அன்வர்பாயே, ''முன்னாள் தலைவருக்கு முக்கிய பொறுப்பு தரப்போறாங்க பா...'' என்றார்.

''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழக பா.ஜ., தலைவரா அண்ணாமலை இருந்தப்ப, கட்சி துடிப்பா இருந்துச்சு... அவரது ஆதரவாளர்களும் உற்சாகமா கட்சிப்பணிகள்ல ஈடுபட்டாங்க பா...

''அவரை தலைவர் பதவியில இருந்து மாத்திட்டதால, அவங்க எல்லாம் சோர்ந்து போயிருக்காங்கன்னு, மத்திய உளவுத்துறையின் அறிக்கை, டில்லி மேலிடத்துக்கு போயிருக்கு... இதனால, தேர்தல் பிரசாரக் குழுவின் தமிழக தலைவரா அண்ணா மலையை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டிருக்காரு பா...

''இதன்மூலமா, 'மறுபடியும் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்... ஆளுங்கட்சியை பிரிச்சு மேய்வார்'னு டில்லி மேலிடம் நினைக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''தன் வெற்றிக்கு ஒத்தாசையா இருக்கணும்னு கேட்டிருக்கார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''அம்ரித் பாரத் திட்டத்துல, புனரமைக்கப்பட்ட சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் திறப்பு விழா, சமீபத்துல நடந்துது... இதுல, சிதம்பரம் தொகுதி எம்.பி.,யும், வி.சி., கட்சி தலைவருமான திருமாவளவன் கலந்துண்டார் ஓய்...

''விழாவுக்கு, திட்டக்குடி தொகுதியின் தே.மு.தி.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான, இப்ப கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவரா இருக்கற தமிழழகனும் வந்திருந்தார்... இவரது சகோதரி, வி.சி., கட்சியில் பொறுப்புல இருக்காங்க ஓய்...

''இதனால, விழா மேடையில திருமாவளவனும், தமிழழகனும் நெருக்கமா ரொம்ப நேரம் பேசியிருக்கா... அப்ப, 'வர்ற சட்டசபை தேர்தல்ல, திட்டக்குடியில நான்தான் நிக்க போறேன்... என் வெற்றிக்கு நீங்க உதவணும்'னு திருமாவிடம், தமிழழகன் கேட்டிருக்கார் ஓய்...

''இதுக்கு திருமாவளவன் என்ன பதில் தந்தார்னு தெரியல... ஆனா, பக்கத்துல நின்னு கேட்டுண்டு இருந்த பா.ஜ., நிர்வாகி ஒருத்தர், இந்த தகவலை எல்லாருக்கும் பரப்பிண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us