/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வசூலில் தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரி! வசூலில் தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரி!
வசூலில் தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரி!
வசூலில் தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரி!
வசூலில் தனி ராஜாங்கம் நடத்தும் போலீஸ் அதிகாரி!
PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

பில்டர் காபியை ருசித்தபடியே, ''எல்லாருக்கும் பைக் வாங்கி தரதா சொல்லியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில், காஞ்சிபுரம் மாவட்டச் செயலரா இருக்கறவர், ஆர்.வீ. ரஞ்சித்குமார்... சமீபத்துல, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் ஓய்...
''அப்ப, வர்ற சட்டசபை தேர்தல் பணிகளை செய்றதுக்கு வசதியா, நம்ம அணியில இருக்கிற ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகிக்கும், தலா ஒரு பைக் வாங்கி தரதா சொல்லியிருக்கார்... இதனால, நிர்வாகிகள் எல்லாம் உற்சாகமா இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தப்பித்தவறி தேர்தல்ல ஜெயிச்சுட்டா, கார் வாங்கி தருவாரோ...'' என சிரித்த அன்வர்பாயே, ''எந்த ரெய்டுக்கும் அசர மாட்டேங்கிறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழகத்தில் இருக்கிற பத்திரப்பதிவு அலுவலகங்கள்ல, அப்பப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவாங்க... தஞ்சை மண்டலம், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில், பெரும்பாலான அலுவலகங்கள்ல சார் - பதிவாளர்களுக்கு பதிலா உதவியாளர்கள் தான் பணியில இருக்காங்க பா...
''ஆனா, இங்க லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையே நடக்கிறது இல்ல... அதையும் மீறி யாராவது சோதனைக்கு வந்தாலும், அவங்களை அதிகாரிகள் சரிக்கட்டிடுறாங்க... உதாரணமா, மதுக்கூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சமீபத்துல லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினாங்க பா...
''ஆனா, அதோட சரி... அப்புறமா எப்.ஐ.ஆர்., போடுறது உள்ளிட்ட மேல் நடவடிக்கை எதுவும் இல்ல... அங்க இருக்கிற உதவியாளர்களும், 'எங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் எதுவும் பண்ண முடியாது'ன்னு தெனாவெட்டா சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''வசூல்ல தனி ராஜாங்கமே நடத்துதாரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் போலீஸ் சப் - டிவிஷன்ல, அதிகாரியா இருக்கிறவர் வசூல் ராஜாவாகவே வலம் வர்றாரு... இவர் இங்க வந்ததுல இருந்து, குட்கா, கஞ்சா, லாட்டரி விற்பனைன்னு எல்லா தில்லுமுல்லுகளும் கொடிகட்டி பறக்கு வே...
''அதிகாரியின் ஆசியோட தான் இந்த சட்டவிரோத செயல்கள் எல்லாம் நடக்கு... அதுக்கு ஏத்த மாதிரி அதிகாரிக்கு, 'படி' அளந்துடுதாவ வே...
''சமீபத்துல, படியூர் போலீஸ் செக்போஸ்டில், நள்ளிரவில் மண் கடத்திட்டு வந்த ஏழு லாரிகளை போலீசார் மடக்கி பிடிச்சாவ... அதிகாரி தலையிட்டதால, ஒரு லாரியை மட்டும் பிடிச்சதா கணக்கு காட்டிட்டு, மீதமுள்ள லாரிகள் மீது வழக்கு பதியாம, அனுப்பிட்டாவ வே...
''இதுக்காக, அதிகாரிக்கு சில லட்சங்கள் கைமாறிட்டு... அதிகாரி, வசூல் வேட்டைக்குன்னே தனியா ஒரு ஏட்டை வச்சிருக்காரு வே... இவர் தினமும் ராத்திரியானா பாரின் சரக்கை ஏத்திக்கிட்டு, நண்பர்களுடன் லுாட்டி அடிக்காரு... இவங்களை உயர் அதிகாரிகளும் கண்டுக்காம இருக்கிறதால, காங்கேயத்துல இவங்க ராஜாங்கம் தான் நடக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''மாயவன், லோகநாதன் வரா பாருங்கோ... சூடா சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.