/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அமைச்சர் பிரசாரம் குறித்து 'பத்த' வைத்த ஆளுங்கட்சியினர்! அமைச்சர் பிரசாரம் குறித்து 'பத்த' வைத்த ஆளுங்கட்சியினர்!
அமைச்சர் பிரசாரம் குறித்து 'பத்த' வைத்த ஆளுங்கட்சியினர்!
அமைச்சர் பிரசாரம் குறித்து 'பத்த' வைத்த ஆளுங்கட்சியினர்!
அமைச்சர் பிரசாரம் குறித்து 'பத்த' வைத்த ஆளுங்கட்சியினர்!
PUBLISHED ON : ஜூலை 05, 2024 12:00 AM

''ஆளுங்கட்சி பிரமுகர் புகாரே எடுபடல வே...'' என்றபடியே, கருப்பட்டி காபிக்கு ஆர்டர் தந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊர் விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை வனச்சரகத்தில், கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில மாவு கல், கருங்கல் போன்றவைகொள்ளை போகுது... இவற்றை கொள்ளையடிக்கும் நபர்கள் குறித்து, உள்ளூர் மக்கள் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்ல வே...
''இங்க இருக்கும் வனத்துறை அதிகாரிகள், கடத்தல் வாகனங்களை மடக்கி பிடிச்சாலும், அபராதமா குறிப்பிட்ட தொகையை கறந்துட்டு அனுப்பிடுதாவ... இந்த அபராத தொகைகளுக்கு முறையா ரசீது போடாம, 'ஆட்டை' போட்டுடுதாவ வே...
''இது பத்தி, அப்பகுதிக்கான வனக்குழு தலைவரா இருக்கும் தி.மு.க., நிர்வாகியே, வனச்சரகரிடம் புகார் கொடுத்திருக்காருன்னா, நிலைமை எந்த அளவுக்கு மோசா இருக்கும்னு பாருங்க...
''ஆனாலும், மேலிட ஆதரவு இருக்கிறதால, புகார் கொடுக்க யாரும் வந்தா, அவங்களை வனச்சரகர் விரட்டி விடுதாரு... ஆளுங்கட்சி நிர்வாகியே புகார் குடுத்தும், நடவடிக்கை எடுக்காத மர்மம் யாருக்கும் புரியல வே...''என்றார், அண்ணாச்சி.
''தண்டனையில்லாம தப்பிச்சிட்டாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருவள்ளூர், புழல் ஒன்றியத்தில், 2020ம் ஆண்டு டிசம்பர்ல நடந்த கூட்டத்துல, நிதி பற்றாக்குறையை சமாளிக்க, புதிய கட்டட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை சதுர மீட்டருக்கு, 10ல இருந்து, 50 ரூபாயா உயர்த்தி தீர்மானம் நிறைவேத்தினாங்க பா...
''அப்புறமா, விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் அனுமதி பெறப்பட்ட மூன்று கட்டடங்களுக்கு, அன்றைய ஒன்றிய அதிகாரிகள் பழைய கட்டணத்தையே வசூல் பண்ணி, 'கமிஷன்' அடிச்சுட்டாங்க பா...
''வருஷம்தோறும் தணிக்கை செய்யும் மாவட்ட தணிக்கை குழு அதிகாரிகளும் இதை கண்டுக்கல... இது பத்தி, புழல் ஒன்றிய 2வது வார்டு கவுன்சிலர் மல்லிகா மீரான், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் குடுத்தாரு பா...
''மாவட்ட அதிகாரிகள், 2022 பிப்ரவரியில் நடத்திய விசாரணையில, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது உறுதியானது... ஆனாலும், அதுக்கு காரணமான பி.டி.ஓ., மற்றும் மேலாளர் பதவி உயர்வுல, வேற ஒன்றியங்களுக்கு போயிட்டாங்க பா...
''அவங்க மேல எந்த நடவடிக்கையும் இல்ல... இதுக்கு மத்தியில, விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட மூன்று கட்டட அனுமதிக்கான ஆவணங்களும், திருவள்ளூர் மாவட்ட அலுவலகத்துல இன்னும் துாங்கிட்டு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''அமைச்சரை பத்தி மேலிடத்துல, 'பத்த' வச்சுட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்ட உள்ளூர் அமைச்சர் காலையிலும், மாலையிலும் ஒரு முறை தான் பிரசாரத்துக்கு போயிருக்கார்... ஆனா, தேர்தல் செலவுக்குன்னு சொல்லி, மாவட்டத்துல இருக்கிற அனைத்து துறை அதிகாரிகளிடமும், அவரது ஆதரவாளர்கள் வசூல் வேட்டை நடத்தியிருக்கா ஓய்...
''இதனால, 'நமக்கு வெற்றி நிச்சயம் தான் என்றாலும், ஓட்டு வித்தியாசம் குறையும்'னு தேர்தல் பணிக்கு வந்த வெளியூர் ஆளுங்கட்சி யினர், மேலிடத்துல, 'பத்த' வச்சுட்டா... இதனால, இப்ப உதயநிதிக்கு நெருக்கமான, 'அன்பான' அமைச்சரை பொறுப்பாளரா நியமித்து, பணிகளை முடுக்கி விட்டிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.