/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வசூலில் வாரி குவிக்கும் நகராட்சி அதிகாரி! வசூலில் வாரி குவிக்கும் நகராட்சி அதிகாரி!
வசூலில் வாரி குவிக்கும் நகராட்சி அதிகாரி!
வசூலில் வாரி குவிக்கும் நகராட்சி அதிகாரி!
வசூலில் வாரி குவிக்கும் நகராட்சி அதிகாரி!
PUBLISHED ON : ஜூன் 08, 2024 12:00 AM

''தமிழகத்துல ஏழெட்டு எம்.பி.,க்கள் கிடைக்கறதை கெடுத்துட்டாரேன்னு புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தேர்தல் முடிவுகள் வெளியான அன்னைக்கு கட்சி நிர்வாகிகள் பலரும், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை சந்திச்சு பேசியிருக்கா ஓய்...
''அப்ப, பா.ம.க., கூட்டணியை நாம ராத்திரி பேசி உறுதி பண்ணிட்டோம்... ஆனா, கார்த்தால, அவாளை மிரட்டி பா.ஜ., தரப்பு அந்த பக்கம் தள்ளிண்டு போயிடுத்து... பா.ம.க., மட்டும் நம்ம கூட வந்திருந்தா சேலம், நாமக்கல், வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி, திருவண்ணாமலைன்னு ஏழெட்டு தொகுதிகள்ல ஜெயிச்சிருக்கலாம்...
''அதுவும் இல்லாம, மத்தியிலயும் பா.ஜ., அரசுக்கு ஆதரவு தந்திருப்போம்... நல்ல வாய்ப்பை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தரப்பு கெடுத்துடுச்சுன்னு வருத்தப்பட்டிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஒலி மாசுதான் முக்கியம்னு சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்ன விஷயமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் ரயில் நிலையத்துல, மின்சார ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்து மைக்குல அறிவிப்பாங்க... ஆனா, கொரோனாவுக்கு பிறகு, பட்டாபிராம்ல இந்த அறிவிப்பை அடியோட நிறுத்திட்டாங்க பா...
''இதனால, ரயில்கள் வர்ற நேரம் தெரியாம, தண்டவாளம் குறுக்கே ஓடி பயணியர் கடக்கிறாங்க... சில நேரங்கள்ல, ரயில் மோதி உயிரிழப்புகளும் நடக்குதுங்க...
''இது பத்தி கேட்டா ரயில்வே அதிகாரிகள், 'மைக்குல அறிவிக்கிறதால, ஒலி மாசு ஏற்படும்'னு சப்பை கட்டு கட்டுறாங்க... பயணியர் உயிரை விட ஒலி மாசுதான் இவங்களுக்கு முக்கியமா போயிடுச்சான்னு தெரியல பா...'' என்றார், அன்வர்பாய்.
''வாரு வாருன்னு வாருதாரு வே...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில முக்கிய அதிகாரியா இருக்கிறவர், இதுக்கு முன்னாடி பணிபுரிந்த ஊர்ல ஊழல் புகார்ல சிக்கிட்டாரு... கோர்ட்ல முறையிட்டு தான் மீண்டும் பணிக்கு வந்திருக்காரு வே...
''அவர் மீதான புகார் நிலுவையில் இருப்பதால, பல மாசமா சம்பளம் வரலை... இதனால, வசூலை வாரி குவிச்சிட்டு இருக்காரு வே... நகராட்சி ஆர்.ஐ., மற்றும் பில் கலெக்டர்கள் மாதம் 20,000 ரூபாய் இவருக்கு, 'கப்பம்' கட்டணும்...
''இவரது வீட்டு வாடகையை பில் கலெக்டர்கள் தான் கட்டுதாவ... நகராட்சி கான்ட்ராக்டர்கள் வழக்கமா தர்ற கமிஷனை விட, கூடுதல் தொகை குடுத்தா தான், பில்களை பாஸ் பண்ணுதாரு வே...
''சமீபத்துல, முதல்ல பணியை முடிச்ச கான்ட்ராக்டருக்கு பில்லை ஓகே பண்ணாம, தாமதமா பணியை முடிச்ச கான்ட்ராக்டரிடம் அதிக கமிஷனை வாங்கிட்டு, பில் பாஸ் பண்ணியிருக்காரு... இதனால, முதல் கான்ட்ராக்டர், அதிகாரியிடம் வாக்குவாதத்துல ஈடுபட்டாரு... ஆனாலும், தான் வகிக்கிற பதவிக்கு ஏத்த மாதிரி அதிகாரி, 'கமிஷன்' வசூல்ல கலக்கிட்டு இருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் மேலும் சிலர் இடம் பிடிக்க,பெரியவர்கள் கிளம்பினர்.