Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பா.ஜ. , புள்ளியிடம் , ' டீல் ' பேசிய திராவிட கட்சியினர் !

பா.ஜ. , புள்ளியிடம் , ' டீல் ' பேசிய திராவிட கட்சியினர் !

பா.ஜ. , புள்ளியிடம் , ' டீல் ' பேசிய திராவிட கட்சியினர் !

பா.ஜ. , புள்ளியிடம் , ' டீல் ' பேசிய திராவிட கட்சியினர் !

PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
“எதை கேட்டாலும் கையை விரிச்சிடுதாவ வே...” என, முதல் ஆளாக அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி...

“கோவை, ஒண்டிப்புதுாரில், 20 ஏக்கர்ல சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க போறதா தமிழக அரசு அறிவிச்சு, ஒரு வருஷம் ஓடிட்டு... போன வருஷ கடைசியில தான், மண் பரிசோதனையே நடந்துச்சு வே...

“சீக்கிரமே மைதானம் டிசைன் தயார் பண்ணி, பணிகளை துவங்குவோம்னு அப்ப அதிகாரிகள் சொன்னாவ... அதுக்கப்புறம், மூணு மாசா ஒரு தகவலும் இல்ல வே...

“இது சம்பந்தமா, கோவை மாவட்ட விளையாட்டு அதிகாரிகளிடம் கேட்டா, 'எல்லாத்தையும் சென்னையில இருக்கிற விளையாட்டு மேம்பாட்டு ஆணையரகம் தான் டீல் பண்ணுது... எங்களுக்கு எதுவும் தெரியாது'ன்னு உதட்டை பிதுக்குதாவ வே...” என்றார், அண்ணாச்சி.

“தி.மு.க., கூட்டணி கட்சியின் மாநில நிர்வாகி புலம்பலை கேளுங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, அம்மாபட்டினத்துல, தமிழக காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு மாநில நிர்வாகி முகமது இஸ்மாயிலுக்கும், தி.மு.க., நிர்வாகிக்கும் நில பிரச்னை இருக்கு... தாசில்தார் முன்னிலையில் சமாதான பேச்சு நடந்துச்சு பா...

“அப்ப, இஸ்மாயில், அவரது தம்பிக்கு ஆளுங்கட்சி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்க, அவர் மீது போலீஸ்ல புகார் குடுத்தாங்க... போலீசாரும் எப்.ஐ.ஆர்., போட்டிருக்காங்க பா...

“நிலம் அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுங்கன்னு, மாவட்ட அமைச்சர் ஒருத்தரிடமும், தி.மு.க., மாநில நிர்வாகிகளிடமும் முகமது இஸ்மாயில் நேர்ல புகார் குடுத்தாரு...

“ஆனா, யாரும் அதை கண்டுக்கவே இல்ல... இதனால, நேரடியா முதல்வரை பார்த்தே புகார் குடுக்க முடிவு பண்ணியிருக்காரு பா...” என்றார், அன்வர்பாய்.

“தொகுதி மாறிடுங்கோன்னு கெஞ்சாத குறையா கேக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டசபை தொகுதியின் தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., சுதர்சனம், கட்சியில் மாவட்ட செயலராகவும் இருக்கார்... இந்த தொகுதியின் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மாதவரம் மூர்த்தியும், அவர் கட்சியில் மாவட்ட செயலரா இருக்கார் ஓய்...

“இந்த தொகுதியில், 2026 தேர்தல்ல, பா.ஜ., பிற்படுத்தப்பட்டோர் நல அணி நிர்வாகி வெங்கடேசனை நிறுத்த மேலிடம் முடிவு பண்ணியிருக்கு... இவர், தொகுதியில தனிப்பட்ட முறையில செல்வாக்கா இருக்கார் ஓய்...

“சமீபத்துல, இவரை ரகசியமா சந்தித்த அ.தி.மு.க., முக்கிய புள்ளியின் ஆதரவாளர்கள், 'கும்மிடிபூண்டி தொகுதிக்கு நீங்க போயிட்டா, நமக்குள்ள கூட்டணி அமையலன்னா கூட, உங்க வெற்றிக்கு பாடுபடறோம்'னு டீலிங் பேசியிருக்கா... தி.மு.க., முக்கிய புள்ளியும், துாதர்களை அனுப்பி, 'திருவொற்றியூர்ல நில்லுங்களேன்'ன்னு டீல் பேசியிருக்கார் ஓய்...

“எல்லாத்துக்கும் மேலா, தேர்தல்லயே போட்டியிடாம வெங்கடேசன் ஒதுங்கிட்டா, அவரை பழைய வழக்குகள்ல இருந்து விடுவிக்கறதாகவும், கணிசமான தொகை தர்றதாகவும் பேசியிருக்கார்...

“வெங்கடேசன், இதை தன் தலைமையிடம் சொல்லியிருக்கார்... அவாளோ, 'நீங்க எதை பத்தியும் கவலைப்படாம தேர்தல் பணிகளை பாருங்கோ'ன்னு சிக்னல் குடுத்துட்டா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய, பெஞ்ச் காலியானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us