/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மண்டல கூட்டத்துக்கு அனுமதி தராத மாநகராட்சி கமிஷனர்! மண்டல கூட்டத்துக்கு அனுமதி தராத மாநகராட்சி கமிஷனர்!
மண்டல கூட்டத்துக்கு அனுமதி தராத மாநகராட்சி கமிஷனர்!
மண்டல கூட்டத்துக்கு அனுமதி தராத மாநகராட்சி கமிஷனர்!
மண்டல கூட்டத்துக்கு அனுமதி தராத மாநகராட்சி கமிஷனர்!
PUBLISHED ON : ஜூலை 03, 2024 12:00 AM

''கூட்டணிக்கு இப்பவே, 'கட்டை' போடுதாங்க வே...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சி விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டிச்சு, அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம் இருந்தாங்கல்லா... அதுக்கு, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நேர்ல போய் ஆதரவு தெரிவிச்சாவ வே...
''இதுக்கு கைமாறா, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல, நாம் தமிழர்கட்சிக்கு அ.தி.மு.க.,வினர் ஓட்டு போட போறதா சொல்லுதாவ... இது படிப்படியா, 'டெவலப்' ஆகி, 2026 சட்டசபை தேர்தல்ல ரெண்டு கட்சியும் கூட்டணி வைக்கும்னு பேசிக்கிடுதாவ வே...
''ஆனா, தமிழக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேர் மொழிவாரி சிறுபான்மையினர் இருக்காங்களாம்... தெலுங்கு பேசும் இவங்களது ஓட்டுகள் பெரும்பாலும் அ.தி.மு.க.,வுக்கு தான் விழுமாம்...
''நாம் தமிழர் கட்சி தரப்பினர், 'மதுரை நாயக்கர் மஹால், தமிழர்களின் அவமான சின்னம்... அதை இடிப்போம்'னு பேசியதை தெலுங்கு பேசும் மக்கள் விரும்பல... இதனால, 'சீமானுடன் கூட்டணி அமைச்சா, அ.தி.மு.க., ஓட்டு வங்கிக்கு அடி விழும்'னு ஒரு குரூப் இப்பவே கிளப்பி விடுது வே...'' என்றார், அண்ணாச்சி.
''தடை எல்லாம் ஏட்டுல தான் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னை மாநகராட்சியின் அம்பத்துார், திரு.வி.க., மண்டலங்கள்ல, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமா இருக்கு... இவற்றை தயாரிக்கும்தொழிற்சாலை, குடோன்கள், அந்தந்த மண்டல மாநகராட்சி அதிகாரிகளின் ஆசியோடு அமர்க்களமா இயங்கறது ஓய்...
''இதனால, இந்த மண்டலங்கள்ல, மட்காத குப்பை கழிவுகள் அதிகரித்து, சுகாதார சீர்கேடும் ஜாஸ்தியாயிடுத்து... இவற்றை அகற்ற முடியாம துாய்மை பணியாளர்கள் ரொம்பவே சிரமப்படறா ஓய்...
''அம்பத்துார் தொழிற்பேட்டை மற்றும் பெரம்பூர் சுற்று வட்டாரங்கள்ல, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ற பெயர் பலகை இல்லாத குடோன்கள்ல டன் கணக்குல பிளாஸ்டிக் பொருட்களை, 'ஸ்டாக்' வச்சிருக்கா... இதை எல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுக்கறதே இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்கிட்டயும் ஒரு மாநகராட்சி தகவல் இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''சீக்கிரமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஓசூர் மாநகராட்சி வேகமா வளர்ந்துட்டு வருது... தொழில் நகரான இந்த மாநகராட்சியில், கல்விக்குழு, வரிவிதிப்பு குழு, நகரமைப்பு குழு, பொது சுகாதார குழு உட்பட மொத்தம் ஆறு நிலை குழுக்கள் இருக்குது பா...
''அதே மாதிரி, மாநகராட்சியை நான்கு மண்டலங்களா பிரிச்சு, அதுக்கும் மண்டல தலைவர்களை தேர்வு பண்ணியிருக்காங்க... எல்லாத்துக்கும் மாநகராட்சி மன்ற கூட்டத்தை எதிர்பார்க்காம, பணிகள் தொய்வின்றி நடக்கணும்னு தான் அந்தந்த நிலை குழுக்கள் மற்றும் மண்டல குழுக்கள் இருக்குது பா...
''ஆனா, நிலை குழுக்கள் சார்புல ஒரு சில கூட்டங்கள் மட்டுமே நடத்தியிருக்காங்க... மண்டல குழு கூட்டங்கள் ஒண்ணு கூட நடத்தலை பா...
''கூட்டம் நடத்த கடிதம் கொடுத்தாலும், கமிஷனர் சினேகா அதுக்கான அனுமதி தர்றது இல்ல... அதுவும் இல்லாம, குழுக்கள், மண்டல குழுக்களுக்கான அலுவலகத்தை கூட இன்னும் ஒதுக்கி தரல... 'எல்லாத்துக்கும் மாநகராட்சியை எதிர்பார்த்துட்டு இருக்க வேண்டியிருக்கு'ன்னு கவுன்சிலர்கள் புலம்புறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.