/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வேலை செய்யாமல் ஊதியம் வாங்கும் பெண் டாக்டர்! வேலை செய்யாமல் ஊதியம் வாங்கும் பெண் டாக்டர்!
வேலை செய்யாமல் ஊதியம் வாங்கும் பெண் டாக்டர்!
வேலை செய்யாமல் ஊதியம் வாங்கும் பெண் டாக்டர்!
வேலை செய்யாமல் ஊதியம் வாங்கும் பெண் டாக்டர்!
PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM

''அடிப்படை வசதிகளை செய்ய முடியலைங்க...'' என்றபடியே, பட்டர் பிஸ்கட்டை கடித்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், லட்சுமிநாராயணபுரம் ஊராட்சி தலைவர் சந்திரபாபு, ஆளுங்கட்சியை சேர்ந்தவரா இருந்தாலும், துணை தலைவர் சத்யாவின் ஒத்துழைப்பு இல்லாம, மக்கள் பணிகளை சரிவர செய்ய முடியாம தவிக்கிறாருங்க...
''துணை தலைவரும் ஊராட்சிக்குள்ள இல்லாம, செங்கல்பட்டில் வசிக்கிறதால, வார்டு மக்கள் எல்லாம், தங்களது குறைகளை தெரிவிக்க, அவரை தேடி செங்கல்பட்டுக்கு போக வேண்டியிருக்குதுங்க...
''கடந்த 11 மாசமா, துணை தலைவர் ஊராட்சி நிர்வாகத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தர மாட்டேங்கிறாரு... துணை தலைவரும், 'செக்'ல கையெழுத்து போட்டா தான் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியும்கிறதால, ஊராட்சியில அடிப்படை வசதிகள் செய்ய முடியாம அதிகாரிகளும் தவிக்கிறாங்க...
''இதனால, துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரணும்னு கேட்டு, ஒன்பது கவுன்சிலர்கள் கையெழுத்து போட்டு, கலெக்டருக்கு அனுப்பியும், அது கிடப்புல கிடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தனக்குன்னு ஒரு கூட்டத்தை சேர்த்து, கோஷ்டிப்பூசலை உருவாக்கிண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரின் உதவியாளர் ஓவரா கெத்து காட்டறார்... தனக்கு பெரிய இடத்தின் முக்கிய புள்ளியான, 'மருமகன்' தொடர்பு இருப்பதால, தன்னை நிழல் அமைச்சராவே பாவிச்சுண்டு இருக்கார் ஓய்...
''தன் சொந்த ஊரான நெல்லையில, பெரிய இடத்தின் பெயரை சொல்லி, தன் வளர்ச்சிக்கான பணிகளை கச்சிதமா பண்றார்... சமீபத்துல, பெரிய இடத்தின் முக்கிய புள்ளிக்கு பிறந்த நாள் வந்துது ஓய்...
''அப்ப, இவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்ல... 'நெல்லை மாவட்டத்துல, முக்கிய புள்ளிக்குன்னு தனியா ஆதரவு வட்டத்தை உருவாக்கி, கட்சியில குழப்பம் பண்றார்'னு, மாவட்ட முக்கிய புள்ளிகள் எல்லாம் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சீனி, இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அன்வர்பாயே, ''மாசம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்கியும், வேலை செய்ய மாட்டேங்கிறாங்க பா...'' என்றபடியே தொடர்ந்தார்...
''சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பல் சிகிச்சை பிரிவுல ஒரு பெண் டாக்டர் இருக்காங்க... நாலு மாசத்துக்கு முன்னாடி தான், இவங்களுக்கு நாகை மருத்துவ கல்லுாரியில் வேலை கிடைச்சது பா...
''இவங்க கணவர் ஆளுங்கட்சியில் இருப்பதாலும், துறையின் முக்கிய புள்ளிக்கு நெருக்கமானவரா இருப்பதாலும், நாகையில, 'போஸ்டிங்' போட்ட மறுநாளே, 'மாற்று பணி' சலுகையில, ராயப்பேட்டைக்கு வந்துட்டாங்க...
''சரி, வந்தவங்க, வேலையை பார்க்கலாமில்லையா... லேட்டா வந்து, சீக்கிரமா வீட்டுக்கு போயிடுறாங்க... மருத்துவமனை நிர்வாகிகள் கேட்டதால, மறுநாள்ல இருந்து தன் கை குழந்தையுடன் வேலைக்கு வர துவங்கிட்டாங்க பா...
''ஆனாலும், நோயாளி களை பார்க்கிறதே இல்லை... காலையில 9:30 மணிக்கு வர்றவங்க, அவங்களுக்கான அறையில, குழந்தையுடன் இருந்துட்டு, மதியம் 1:00 மணிக்கு கிளம்பிடுறாங்க... 'பயோ மெட்ரிக்' வருகை பதிவும் இவங்களுக்கு கிடையாதாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.