Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கோயம்புத்தூர்/ கோவைப்புதுார் சாலைகளில் அடிமண் இறங்குது; மாநகராட்சி மனசு மட்டும் இறங்க மாட்டேங்குது

கோவைப்புதுார் சாலைகளில் அடிமண் இறங்குது; மாநகராட்சி மனசு மட்டும் இறங்க மாட்டேங்குது

கோவைப்புதுார் சாலைகளில் அடிமண் இறங்குது; மாநகராட்சி மனசு மட்டும் இறங்க மாட்டேங்குது

கோவைப்புதுார் சாலைகளில் அடிமண் இறங்குது; மாநகராட்சி மனசு மட்டும் இறங்க மாட்டேங்குது

ADDED : மே 26, 2025 11:58 PM


Google News
Latest Tamil News

நடக்கவே முடியவில்லை


வேலாண்டிபாளையம் டாக்டர் ராமசாமி லே-அவுட், 44வது வார்டு, முதல் வீதியில், பல வருடங்களாக பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. சாலை முழுவதும் பெரிய பள்ளங்களில், மழைநீர் தேங்கி உள்ளது. நடக்கவும், வாகனங்களை இயக்கவும் மிகவும் சிரமமாக உள்ளது.

- சுரேஷ், வேலாண்டிபாளையம்.

பகலிலும் எரியும் விளக்குகள்


கோவை மாநகராட்சி, எட்டாவது வார்டு, நேருநகர் மேற்கு, எட்டாவது வீதியில் தெருவிளக்குகள் 24 மணி நேரமும் எரிந்துகொண்டிருக்கின்றன. மின்சாரம் வீணாவது குறித்து புகார் செய்தும் நடவடிக்கையில்லை. காலையில் சரியான நேரத்தில்தெருவிளக்குகளை'ஆப்'செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நடராஜன், நேருநகர்.

சீரமைக்காத ரோடு


குனியமுத்துார், 93வது வார்டு, இடையர்பாளையம் பிரதான சாலையில் குழாய் பதிப்பிற்காக குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்த பின்னர், தார் சாலை அமைத்து சீரமைக்கவில்லை. இருபுறமும் மண் குழிகளில், தண்ணீர் தேங்கி உள்ளது. நடுவில் மட்டுமே தார் ரோடு உள்ளது. பிரதான சாலை என்பதால் விரைந்து சீரமைத்துத் தர வேண்டும்.

- வினோத்குமார், மணிகண்டன் நகர்.

வீணாகும் குடிநீர்


வெரைட்டிஹால் ரோடு, சூரியன் வீதியில் ஒரு மாதமாக குழாய் உடைந்து, சாலையில் தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. பெருமளவு தண்ணீர் வீணாகி சாலையிலும், சாக்கடையிலும் கசிகிறது.விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- வெற்றிவேல், சூரியன் வீதி.

சேறும், சகதியும்


வெள்ளலுார், மருதுார், அசோகர் வீதி, திருவாதிரை எஸ்.எஸ்., நகரில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. மண் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனங்களை இயக்கவும், நடக்கவும் முடியவில்லை.

- சேவியர் டேவிட், வெள்ளலுார்.

மின்விபத்திற்கு வாய்ப்பு


திருச்சி ரோடு, ராமநாதபுரம், எல்.ஜி.பி., காலனியில் மழையால் மின்கம்பம் சாய்ந்துள்ளது. மின்விபத்து நிகழ வாய்ப்புள்ளதால், விரைந்து கம்பத்தை சீர்செய்ய வேண்டும். சாயும் நிலையில் உள்ள கம்பங்களையும், சரிசெய்ய வேண்டும்.

- செந்தில்குமார், ராமநாதபுரம்.

உடைந்த சிலாப்


கோவை மாநகராட்சி, 79வது வார்டு, முத்துசாமி காலனி மெயின் வீதியில், சாலையில் பாதாள சாக்கடை சிலாப் உடைந்துள்ளது. தற்காலிகமாக பலகைகள், உடைந்த சிலாப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் என்பதால், உறுதியாக கான்கிரீட் சிலாப் கொண்டு மூட வேண்டும்.

- பாலமுருகன், 79வது வார்டு.

தினமும் விபத்து


தொண்டாமுத்துார் ரோட்டில், பனைமரத்துார், சீரநாயக்கன்பாளையம் திரும்பும் பகுதியில், நான்குரோடு சந்திப்பில், சாலையோரம் தார் பெயர்ந்து, வெறும் ஜல்லிக்கற்களாக உள்ளது. இப்பகுதியில் தினமும் விபத்து நடப்பதால், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.

- உண்ணிகிருஷ்ணன், தொண்டாமுத்துார் ரோடு.

சிக்கும் வாகனங்கள்


கோவைப்புதுார், 90வது வார்டு, செல்வம் நகர், குற்றாலம் நகர் போன்ற பகுதிகளில் குடிநீர் குழாய்போடுவதற்காக, தோண்டப்பட்ட இடங்களில் மழையின் காரணமாக மண் இறங்கி உள்ளது. வாகனங்கள் செல்லும் போது, சாலையில் சக்கரங்கள் மாட்டிக்கொள்கின்றன.

- பாலாஜி,

கோவைப்புதுார்.

விழும் நிலையில் மரம்


கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 33வது வார்டு, மூவர் நகரில், சாலையோரத்தில் உள்ள மரத்தின் அடிப்பகுதி மண், கால்வாய் தண்ணீரால் அரித்துவிட்டது. போதிய பிடிமானமின்றி உள்ளதால், மரம் சாய வாய்ப்புள்ளது.

- முருகேசன், கவுண்டம்பாளையம்.

தேங்கும் மழைநீர்


குனியமுத்துார், 88வது வார்டு, மின் நகரில், சமீபத்தில் புதிதாக போட்ட தார்சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், விரைவில் சாலை பழுதடைய வாய்ப்புள்ளது. மழைநீர் முறையாக வடிந்து வாய்க்காலில் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும்.

- திருஞானசம்பந்தர், குனியமுத்துார்.

நாற்றுதான் நடணும்


சின்னவேடம்பட்டி, உடையாம்பாளையம், 12வது வார்டு, பார்க் டவுன் பகுதியில் மண் சாலையை மழைக்காலங்களில் பயன்படுத்தவே முடியவில்லை. மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். நடந்து செல்லவும் முடியவில்லை.

- சக்தி, பார்க் டவுன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us