Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கோயம்புத்தூர்/ தார்சாலை கேட்கும் வடவள்ளி அருண் நகர் மக்கள்; மழை வந்தால் சகதியில் 'தத்தக்கா புத்தக்கா'

தார்சாலை கேட்கும் வடவள்ளி அருண் நகர் மக்கள்; மழை வந்தால் சகதியில் 'தத்தக்கா புத்தக்கா'

தார்சாலை கேட்கும் வடவள்ளி அருண் நகர் மக்கள்; மழை வந்தால் சகதியில் 'தத்தக்கா புத்தக்கா'

தார்சாலை கேட்கும் வடவள்ளி அருண் நகர் மக்கள்; மழை வந்தால் சகதியில் 'தத்தக்கா புத்தக்கா'

ADDED : மே 20, 2025 12:08 AM


Google News
Latest Tamil News

வீணாகும் குடிநீர்


கணபதி, ஸ்ரீ தேவி நகர் சாலைப் பணியின் போது, உப்பு தண்ணீர் குழாய் உடைந்து விட்டது. கடந்த இரண்டு நாட்களாக, அதிக தண்ணீர் வீணாகி வருகிறது. தற்காலிகமாக மெயின் இணைப்பு அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குடிநீர் விநியோகத்தின் போது மீண்டும் நீர் வீணாகும் என்பதால், விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- கோதனவள்ளி, கணபதி.

தார் சாலையின்றி தவிப்பு


வடவள்ளி, அருண் நகர், ஐந்தாவது குறுக்கு தெருவில், தார் சாலை வசதியில்லை. மழை பெய்யும் போது சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. பாதசாரிகளும், வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக, தார் சாலை வசதி கேட்டும், எந்த நடவடிக்கையுமில்லை.

- ராமலட்சுமி, வடவள்ளி.

பகலிலும் தெருவிளக்கு பளிச்


கோவை மாநகராட்சி, 41வது வார்டு, ஜெகதீஸ் நகர், பொன்னுசாமி நகர் பகுதிகளில் அனைத்து தெருவிளக்குகளும், பகலிலும் தொடர்ந்து எரிகின்றன. இதனால், தினமும் மின் விரயம் ஏற்படுகிறது. பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- ரவி, பொன்நகர்.

தரமற்ற தார்சாலை


வெள்ளக்கிணறு, மாசாணியம்மன் நகரில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதிய தார் சாலை போடப்பட்டது. தரமாக போடாததால், பல இடங்களில் தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. பெரும் பள்ளங்கள் இருப்பதால், விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.

- தேவி, வெள்ளக்கிணறு.

பேருந்து நிலைய அவலம்


துடியலுார், இரண்டாவது வார்டு, பேருந்து நிலையம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பேருந்து நிலையம் முழுவதும் குப்பையாக, அசுத்தமாக உள்ளது. மது குடித்துவிட்டு சிலர் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்குகின்றனர். தெருநாய்களும் பேருந்து நிலையத்தில் கூட்டமாக படுத்துள்ளன.

- சண்முகம், துடியலுார்.

குளத்தை மூடும் ஆகாயத்தாமரை


குறிச்சி குளத்தை மூடியபடி ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது. கழிவுநீர் குளத்தில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆகாயத்தாமரைகளை அகற்றுவதுடன், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

- பாலன், போத்தனுார்.

கழிவுநீர் தேக்கம்


பெரியநாயக்கன்பாளையம், சோமையபாளையம், கஸ்துாரிநாயக்கன்பாளையம், நேதாஜி வீதி, இரண்டாம் தெருவில், சாக்கடை கால்வாயில் சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்துள்ளது. சிலேப்புகள் உடைந்துள்ளன. சாக்கடை கால்வாயை சுற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது. சாக்கடை துார்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

- உமானந்தன், நேதாஜி வீதி.

மழை, வெயிலில் வாடும் பயணிகள்


செட்டிபாளையம் பேரூராட்சி, சங்கமம் நகர் பகுதியில், நீண்ட நாட்களாக பேருந்து நிறுத்த நிழற் குடை அமைத்து தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. பள்ளி மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள், நீண்ட நேரம் வெயில், மழையில் காத்திருக்கின்றனர்.

- முருகானந்தம், செட்டிபாளையம்.

கடும் துர்நாற்றம்


காந்திமாநகர், எப்.சி.ஐ., மெயின் ரோட்டின் ஓரத்தில், பெருமளவு குப்பை குவிந்துள்ளது. வாரக்கணக்கில் தேங்கியுள்ள கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் இப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தங்கவேல், காந்திமாநகர்.

கொசு உற்பத்தி படுஜோர்


கருமத்தம்பட்டி - அன்னுார் சாலையோரம், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாராததால் கழிவுநீர் நிரம்பி நிற்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. பல இடங்களில், கால்வாயில் இருந்து கழிவுகளை அகற்றி, சாலையோரத்திலேயே குவித்துள்ளனர். மீண்டும் இந்தக்கழிவுகள் கால்வாயினுள்ளே விழுகின்றன.

- வேணுகோபால், கருமத்தம்பட்டி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us