Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ வேலை என்னை மாற்றியது!

வேலை என்னை மாற்றியது!

வேலை என்னை மாற்றியது!

வேலை என்னை மாற்றியது!

PUBLISHED ON : மார் 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
வேலுார் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில், உதவி மேலாளராக பணியாற்றும், துாத்துக்குடியை சேர்ந்த சக்தி:

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். பாட்டியும், மாமாவும் தான் என்னை வளர்த்து ஆளாக்கினர். பள்ளி, கல்லுாரிகளில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.

ஆனாலும் இந்த சமூகத்தை எதிர்கொள்வதில் எனக்கு பயம். அதனால், ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே இருந்தேன். வெளியுலகம் எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது. 'வெளியுலகத்தை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அப்போது தான் யாருக்கும் சுமையாக இல்லாமல், நம் வாழ்க்கையை நாமே கையாள முடியும்' என, என் மனம் சொல்லும்.

அதற்காகவே படிப்பில் முழு கவனம் செலுத்தினேன். எனக்கு கணிதப் பாடம் மேல் அதீத விருப்பம் என்பதால், வங்கி பணிக்கு படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக, அசிஸ்டென்ட் மேனேஜர் பணிக்கான தேர்வுக்காக, சென்னையில் ஒரு, 'கோச்சிங்' சென்டரில் தங்கியிருந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.

'கொரோனா' பெருந்தொற்று காலம் அது... கூடவே, போட்டித்தேர்வு தயாரிப்புகள், புது ஊரில் மக்களை, சமூகத்தை சந்திப்பதில் இருந்த பயம் என, எல்லாம் சேர்ந்து என் நாட்களை மிகவும் கடினமாக்கின.

ஆனால், அதற்குள் நான் என்னை தொலைக்க, இழக்க இடம் கொடுக்காமல் மொத்தமாக பாடப் புத்தகங்களுக்குள் என்னை புதைத்துக் கொண்டேன். அந்த வகையில், அந்த கஷ்டமான காலத்தையும் நான் எனக்கு சாதகமாக்கிக் கொள்ள, தேர்வில் வெற்றி பெற்றேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், என் வேலைக்கான, 'ஆர்டர்' கையில் கிடைத்தபோது, இனிமேல் நம் வாழ்க்கை மாறி விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இனி, நம் தேவைகளை நாம் பார்த்துக் கொள்ளலாம் என புத்துணர்வாக உணர்ந்தேன். என் பணி காரணமாக, என் சின்ன வட்டத்தை விட்டு வெளியில் வந்து மக்களை, சமூகத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தது, என்னளவில் பெரிய விஷயம், பெரிய மாற்றம்.

வேலையில் சேர்ந்த புதிதில், எப்படி பேசணும், பழகணும்னு எனக்கு தெரியவில்லை. அதனால், என் நட்பு வட்டத்தை பெரிதாக்கி கொண்டேன். சக மனிதர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

தற்போது என் வேலையால் என் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. என் படிப்பு என்னை உயர்த்தியது போல, என்னை போன்ற நிலையில் இருக்கிற இளைய தலைமுறையினர் பலரையும் உயர்த்த வேண்டும்...

அதனால், கல்வி உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். நல்லா படிப்போம், முழுமையாக முயற்சி எடுத்து நல்ல வேலையில் சேருவோம். அது நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us