/தினம் தினம்/சொல்கிறார்கள்/ திருப்தி என்ற வார்த்தையை தினமும் கேட்கிறோம்! திருப்தி என்ற வார்த்தையை தினமும் கேட்கிறோம்!
திருப்தி என்ற வார்த்தையை தினமும் கேட்கிறோம்!
திருப்தி என்ற வார்த்தையை தினமும் கேட்கிறோம்!
திருப்தி என்ற வார்த்தையை தினமும் கேட்கிறோம்!
PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

புதுச்சேரியில் உள்ள, 'சேலம் பிரியாணி' ஹோட்டலின் உரிமையாளர்களில் ஒருவரான குணசேகரன் - சாந்தி தம்பதி:
குணசேகரன்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் தான் என் சொந்த ஊர். குடும்ப சூழல் காரணமாக, என் தாத்தா 1960ல் புதுச்சேரிக்கு வந்து விட்டார்.
பிழைப்புக்கு என்ன செய்வது என்று யோசித்தவர், வீட்டிலேயே சிறிதளவு மட்டன் பிரியாணி செய்து விற்பனையை ஆரம்பித்தார்.
மொத்த பிரியாணியும் விற்றுவிட, மறுநாளில் இருந்து வாடிக்கையாளர்கள், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் அழைத்துவர ஆரம்பித்தனர்.
அந்த அளவுக்கு சுவையாக இருக்க முக்கிய காரணம், அனைத்து மசாலாக்களையும் தாத்தாவும், பாட்டியும் வீட்டிலேயே அரைத்தனர் என்பதுதான்.
தாத்தா காலத்திற்குப் பின் அப்பாவும், அப்பா காலத்திற்குப் பின் நானும், அண்ணனும் பொறுப்பேற்றோம். அண்ணன் இறந்தவுடன் நான் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டேன்.
குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாக, 2017ல் ஹோட்டல் செயல்படவில்லை. அப்போது, மனைவிதான் எனக்கு பக்கபலமாக நின்றார்.
ஹோட்டலை, 2019ல், ஈஸ்வரன் கோவில் வீதிக்கு மாற்றினோம். மனைவி நிர்வாகத்தை பார்த்துக் கொண்டார். நான் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.
தினமும் மதியம் 12:00 மணிக்கு ஹோட்டலை திறப்போம். 2:00 மணிக்குள் மட்டன் பிரியாணியும், கோலா உருண்டையும் தீர்ந்துவிடும். 3:00 மணிக்குள் சிக்கன் பிரியாணியும் முடிந்து விடும். அத்துடன் இரவு 7:00 மணிக்குதான் மீண்டும் திறப்போம்.
சாந்தி: பிரியாணி தயாரிக்க நெய் மட்டுமே பயன்படுத்துகிறோம்; வனஸ்பதி உபயோகிப்பதில்லை. 1960ல் என்ன செய்முறையில் பிரியாணி செய்தனரோ, அதே முறையில், அதே சீரக சம்பா அரிசியில்தான் இன்றும் செய்கிறோம்.
பணம் வாங்கும்போது மட்டும்தான் நான் கல்லாவில் இருப்பேன். மற்ற நேரங்களில் வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டிருப்பேன். ஏதேனும் குறைகள் கூறினால், அதை உடனே சரி செய்து விடுவேன்.
இத்தொழிலில் திருப்தி என்ற வார்த்தையை, வாடிக்கையாளர்களிடம் வாங்குவது மிகவும் கஷ்டம். ஆனால், அந்த வார்த்தையை தினமும் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் ஊரில் இல்லை என்றாலும், எங்கள் ஊழியர்கள் இந்த ஹோட்டலை நன்கு பார்த்துக் கொள்வர். காரணம், அவர்களையும் எங்கள் குடும்பமாகத்தான் பார்க்கிறோம்.
பாரம்பரியமிக்க இந்த பிரியாணி பிசினசை வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என் கனவு.