Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ எங்கள் கடைக்கு 'கரன்ட் கனெக் ஷன்' கூட கிடையாது!

எங்கள் கடைக்கு 'கரன்ட் கனெக் ஷன்' கூட கிடையாது!

எங்கள் கடைக்கு 'கரன்ட் கனெக் ஷன்' கூட கிடையாது!

எங்கள் கடைக்கு 'கரன்ட் கனெக் ஷன்' கூட கிடையாது!

PUBLISHED ON : மார் 16, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தென்காசி மாவட்டம், கடையாலுருட்டியில், 'மணி அரசி' என்ற அசைவ உணவகத்தை நடத்தி வரும், 80 வயதை கடந்த பூமணி பாட்டி:

எனக்கு, 20 வயதில் திருமணம் முடிந்த கையுடன், ஊட்டிக்கு அருகே உள்ள கூடலுாருக்கு எஸ்டேட் வேலைக்கு கணவர் அழைத்து சென்றார்.

பிழைப்புக்காக அங்கு சென்ற நாங்கள், உபரி வருமானத்துக்கு ஹோட்டல் ஆரம்பித்தோம். சில ஆண்டுகளிலேயே அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கையில் இருந்த பணத்துக்கு சாப்பாடு கடை நடத்துவது கஷ்டம் என தெரிந்தது. ஆனால், எங்களுக்கு தெரிந்த ஒரே தொழிலும் இது தான். அதனால், வீட்டில் இட்லி, தோசை, பூரி சமைத்து, வெளியே வைத்து சின்னதாக வியாபாரத்தை துவக்கினோம்.

ஓரளவிற்கு கை கொடுத்தது. அடுத்து தற்போதிருக்கும் இந்த இடத்தை தரை வாடகைக்கு பிடித்து, ஹோட்டல் ஆரம்பித்தோம்.

நாங்கள் ஹோட்டல் ஆரம்பித்த காலக்கட்டத்தில், சுற்றுவட்டார கடைகளில் மட்டன் சாப்பாடு பிரசித்தியாக இருந்தது. ஆனால், நாங்கள் பிராய்லர் கோழி சமைத்து சாப்பாடு வழங்கினோம். அதுவரை மட்டன் குழம்பை ருசித்தவர்களுக்கு, பிராய்லர் கோழி ருசி பிடித்து போனது. அப்போது ஒரு முழு சாப்பாட்டின் விலை, 7 ரூபாய் தான்.

வயிறார சாப்பாடு கிடைக்கும் என்பதால், மக்கள் விரும்பி வந்தனர். நாட்கள் செல்ல செல்ல வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. சுற்றுவட்டார கிராமத்தினர் தவிர, அருகே உள்ள ஊர்களுக்கு காய்கறி லோடு கொண்டு வரும் லாரி டிரைவர்கள், பாவூர்சத்திரம் மார்க்கெட் செல்லும் வியாபாரிகள், கூலி வேலைக்கு செல்வோர் என பல தரப்பட்டவர்களும் வர ஆரம்பித்தனர்.

தவிர, வீட்டு விசேஷங்களுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்கிறோம். சுற்றுவட்டாரத்தில் எங்கள் கடைக்கு வராத முக்கியஸ்தர்களே கிடையாது. வியாபாரத்துக்காக கடை திறந்தாலும் வயிறார, திருப்திகரமான சாப்பாடு கொடுக்க வேண்டும். அது தான் என் நோக்கம்.

மூன்று வேளையும் ஹோட்டல் நடத்துவது பெரிய விஷயமல்ல. ஆனால் தரத்திலோ, ருசியிலோ சிறு குறை வந்துவிட்டால், அது, இத்தனை ஆண்டு காலம் சேர்த்த மொத்த பெயரையும் கெடுத்து விடும். அதனால், மதியம் 12:00 முதல் மாலை 3:30 மணி வரை தான் கடை திறக்கிறோம்.

தற்போது வரை, விறகு அடுப்பில் தான் சமையல் செய்கிறோம். மீதமாகும் குழம்பு வகைகளோ, இறைச்சி உணவுகளையோ மறுநாள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே, கடையில் பிரீசர், பிரிஜ் என எதுவும் வாங்கி வைக்கவில்லை. வெளிப்படையாக சொன்னால், கடைக்கு கரன்ட் கனெக் ஷன் கூட கிடையாது.

************************

வலியுடன் வந்தாலும் சிரிப்புடன் செல்வர்!

கடந்த 35 ஆண்டு களில், 10,000 பிரசவங்களுக்கு மேல் பார்த்திருக்கும், சென்னையைச் சேர்ந்த மூத்த மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் என்.பழனியப்பன்:சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படித்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால்

எம்.பி.பி.எஸ்., மாணவர்கள்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தது. அப்போது நான் பிரசவ அறையில் பணியாற்றினேன்.

அங்கு, எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரின் வீட்டில் பணியாற்றும் பெண், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு பிரசவம் பார்த்து, அவர் உடல்நிலையை நன்றாக கவனித்து கொண்டேன். அவர், மருத்துவமனைக்கு குழந்தையுடன் வரும்போதெல்லாம் என்னை தேடி வந்து பார்த்து செல்வார்.

இதைப் பார்த்த பேராசிரியர்கள், 'நீ ஏன் மகப்பேறு மருத்துவத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது' என்றனர். இதனால், மனநல மருத்துவராகும் எண்ணத்தில் இருந்த நான், மகப்பேறு மருத்துவராகும் முடிவை எடுத்தேன்.

நான் பணிபுரிந்த மகப்பேறு துறையில், 25 பெண்கள் இருந்தனர். அவர்கள் மத்தியில் ஒரே ஆணாக இருந்ததால், சிறப்பாக பணியாற்றினாலும் தனித்து தெரியும்; தவறுகளும் தனித்து தெரியும். பாலினத்தால் தனித்து தெரியக்கூடாது. என் திறன்களால் தனித்து தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம்.

சிலர், ஆண் மகப்பேறு மருத்துவர்களிடம் பிரசவம் பார்க்க விரும்புவதில்லை.

அந்த பெண்ணுக்கு தயக்கமில்லை என்றாலும், உடன் வரும் அம்மாவோ, மாமியாரோ தயக்கம் தெரிவிப்பர்.மருந்து, மாத்திரைகளை நான் எழுதிக் கொடுப்பேன். பரிசோதனை செய்வதற்கு மட்டும் பெண் மருத்துவர்களை அழைக்கச் சொல்வர்.

ஆனால், என் அணுகுமுறை பிடித்துப் போய், தயக்கம் காட்டியவர்களே மனம் மாறி, என்னிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். எத்தனை பெண் மருத்துவர்கள் இருந்தாலும், என்னிடம் சிகிச்சை பெற வேண்டும்

என்று வருவோரும் இருக்கின்றனர்.இன்றைய இளம் மருத்துவர்கள், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பணியாற்றினால் போதும் என்று நினைக்கின்றனர்.

அவசர சிகிச்சை, அவ்வளவாக தேவைப்படாத குழந்தையின்மை சிகிச்சை போன்ற துறைகளை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால், மகப்பேறு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்தபடியே இருக்கிறது.

எங்களுடையது பிறப்பை கையாளும் துறை. வலியுடன் வந்தாலும், மருத்துவமனையில் இருந்து சிரிப்புடன் வீட்டுக்கு செல்வர். இந்த உலகம் இயங்கும் வரை,

மகப்பேறு மருத்துவம் இருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us