PUBLISHED ON : ஏப் 12, 2026 12:00 AM

அடுப்பு மற்றும் எண்ணெய் பயன்படுத்தாமல், சென்னை, வேளச்சேரியில், 'நோ ஆயில் நோ பாயில்' என்ற உணவகத்தை நடத்தி வரும், 36 வயதான, கண்ணம்மா நீலகண்டன்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பக்கத்தில் உள்ள தர்ம சமுத்திரம் கிராமம் தான் எனக்கு பூர்வீகம். கோவையில் இயற்கை ஆர்வலராக உள்ள, 'படையல்' சிவா என்பவர், இயற்கை உணவகம் நடத்தி வருவது தெரிந்து, அவரை சந்தித்து, ஓராண்டு காலம் அங்கேயே தங்கி, அடுப்பே இல்லாமல் எப்படி அறுசுவை விருந்து சமைப்பது என்பதை கற்றுக் கொண்டேன்.
கிட்டத்தட்ட, 500 வகையான உணவுகள் செய்ய கற்றுக் கொண்டேன். இதில் மிக முக்கியம், பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானியங்களை அவலாக, ரவையாக, மாவாக மாற்றி, எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொண்டது தான்.
சென்னை, வேளச்சேரியில், 2022ல், 'நோ ஆயில் நோ பாயில்' உணவகத்தை ஆரம்பித்தேன். அவல், சிறுதானிய மாவு என எல்லாவற்றையும் தேங்காய்ப்பாலில் ஊற வைத்து விடுவோம். சாதம், கொழுக்கட்டை, இட்லி, புட்டு என எல்லாம் அதில் செய்வது தான்.
வடைக்கும், பருப்பு வகைகளை மாவாக்கி, இயற்கையிலேயே எண்ணெய் சுரக்கும் பாதாம், முந்திரிகளை பொடித்து சேர்த்து பிசைந்து, கொப்பரை தேங்காயில் வைப்போம். வாழைப்பூவை பொடியாக நறுக்கி, எலுமிச்சை சாறு, இந்துப்பு சேர்த்த கலவையில், நான்கு மணி நேரம் ஊற வைப்போம்.
அதை வடிகட்டி, பருப்பு, கொப்பரை தேங்காய் கலவையோடு சேர்த்து, வடைகளாக தட்டி அப்படியே பரிமாறுவோம். எண்ணெயில் பொரிக்கவில்லை என்று சொன்னால் தான் தெரியும்; சுவையில் எந்த வித்தியாசமும் தெரியாது. தேங்காய்ப்பாலில், பாதாம் பிசின் சேர்த்து பாயசம் செய்வோம்.
தேங்காய் துருவி, மிக்சி தவிர எங்கள் சமையலுக்கு வேறு எந்த கருவிகளையும் பயன்படுத்துவதில்லை. ஊற வைப்ப து, அரைப்பது, பிசைவது என, அடுப்பில்லா சமையலில் இந்த மூன்றும் தான் முக்கியமான நுணுக்கங்கள்.
சமைப்பது தொடங்கி, பரிமாறுவது வரை அனைத்து வேலைகளுக்கும் பெண்களையே நியமித்துள்ளேன். பெரிய லாபம் வருகிறது என்று கூற முடியாது; அதே சமயம் நஷ்டத்தையும் கொடுக்கவில்லை. அடுப்பில்லாமல் சமைக்க கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு, வகுப்புகளும் எடுக்கிறேன்.
அப்படி கற்று கொண்டு வெளியூர், வெளிநாடுகளில் பலரும் இந்த தொழிலை செய்கின்றனர். இதை நான் வியாபாரமாக பார்க்கவில்லை; ஒரு நல்ல விஷயத்துக்கான முன்னெடுப்பாகத்தான் பார்க்கிறேன். அந்த திருப்திக்கு எதுவும் ஈடாகாது.
தொடர்புக்கு:63831 74250
'ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டா!
'
'சசி
புட்ஸ் அண்டு ஹெர்பல்ஸ்' என்ற பெயரில், 15 வகை மூலிகை மதிப்புக் கூட்டல்
பொருட்களை தயார் செய்து, விற்பனை செய்து வரும், வேலுார் மாவட்டம்,
துரைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த, 40 வயதான கார்த்திக்:
எனக்கு
சிறு வயது முதலே, பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது.
நுண்ணுயிர்கள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் இருந்ததால், அந்த துறையில்
முனைவர் பட்டம் வாங்கினேன்.
என் பெற்றோர் நீரிழிவு நோயால்,
மிகவும் சிரமப்பட்டனர். அப்பா தான், 'உன் படிப்பை பயன்படுத்தி, சர்க்கரை
வியாதிக்கு பாரம்பரிய மூலிகை சார்ந்த ஒரு மருந்தை தயார் செய்... அது
வீரியமாகவும் இருக்கணும். விலை குறைவாகவும் இருக்கணும்...' என்று சொன்னார்.
நுண்ணுயிரிகள் துறையில் பரிச்சயம் இருந்தாலும், சித்த மருந்து,
மூலிகைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அடிப்படை விஷயங்களை கற்றுக்
கொள்வதற்காக, சேலத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லுாரியில், நுண்ணுயிரிகள்
துறையில் வேலைக்கு சேர்ந்தேன்.
அதன்பின், மருந்து தயாரிப்பில்
ஈடுபட ஆரம்பித்தேன். கிராமங்களில், 'ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா'
என்று ஒரு பழமொழி உண்டு. ஆவாரையில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
குறிப்பாக, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில், ஆவாரம் பூ
சிறப்பாக செயல்படும். ஆவாரம் பூவை ஆய்வுக்கு எடுத்து, அதனுடன் சேர்க்கும்
துணை பொருட்கள், சாப்பிடும் அளவு என பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து.
'ஆவாரம் பூ அமிர்தம்' என்ற பொடியை உருவாக்கினேன்.
தேநீருக்கு
பதிலாக இதை பயன்படுத்தினால், சர்க்கரை அளவு சீராகிவிடும். இதை, சென்னை
அரும்பாக்கத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில்
ஆய்வுக்கு கொடுத்து, சான்றிதழும் வாங்கி உள்ளேன். மத்திய அரசின் அங்கீகாரம்
பெற்ற ஆய்வகத்திலும் சான்றிதழ் வாங்கி உள்ளேன்.
என்
பெற்றோருக்கு, ஆவாரம் பூ அமிர்தம் கொடுத்ததில், நல்ல மாற்றம் தெரிந்தது.
அடுத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தேன். அவர்கள்
வாயிலாக, பல வாடிக்கையாளர் அறிமுகமாயினர். சமூக வலைதளம் வாயிலாக, விற்பனையை
விரிவுபடுத்தினேன்.
மாதத்திற்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை
வருமானம் கிடைக்கிறது. அனைத்து செலவுகளும் போக, 60,000 ரூபாய் லாபம்
வருகிறது. என் படிப்புக்கும், அனுபவத்துக்கும் வேறு நிறுவனங்களில்
வேலைக்கு சென்றால், அதிக வருமானம் கிடைக்கும்.
ஆனால், என் படிப்பும், ஆராய்ச்சியும், அனுபவங்களும் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதால், சேவையாக நினைத்து இதை செய்கிறேன்.
தொடர்புக்கு: 99525 45640





