Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ தொடர்ந்து ஏதாவது ஒன்றை கற்றபடியே இருக்கிறேன்!

தொடர்ந்து ஏதாவது ஒன்றை கற்றபடியே இருக்கிறேன்!

தொடர்ந்து ஏதாவது ஒன்றை கற்றபடியே இருக்கிறேன்!

தொடர்ந்து ஏதாவது ஒன்றை கற்றபடியே இருக்கிறேன்!

PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே வேட்டையார் பாளையத்தில், பண்ணை அமைத்து, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மனோகரன்: எங்கள் குடும்ப தொழிலே விவசாயம் தான். 1977ல் காவல் துறையில் சேர்ந்து இன்ஸ்பெக்டராகி, 37 ஆண்டுகள் பணியாற்றி, 2014ல் ஓய்வு பெற்றேன்.

இந்த பண்ணை, 9.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் தண்ணீர் பற்றாக்குறையுடன், ஆள் பற்றாக்குறையும் இருந்தது.

அதனால், பணியில் இருந்தபோதே பழப்பயிர், மரப்பயிர் விவசாயத்தை துவக்கினேன். மேலும், காய்கறிகள், கீரைகள், பப்பாளி என்று மாற்றி மாற்றி பயிர் செய்தபடியே இருந்தேன்.

விளைபொருட்களை விற்க, தமிழ்நாடு அங்கக வேளாண்மை சான்றிதழையும் வாங்கினேன். இதற்கிடையில், இயற்கை இடுபொருட்களை நானே தயார் செய்து, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கொடுக்க ஆரம்பித்தேன்.

அத்துடன், நிழல் வலை குடில் அமைத்து கீரைகள், நாற்றுகள் உற்பத்தி செய்தேன். மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, தேவைப்படும் விவசாயிகளுக்கு கொடுத்தேன்.

நாட்டு காய்கறி விதைகளை சேகரித்து, விவசாயிகளிடம் பரவலாக்கம் செய்தும் வருகிறேன். மேலும், எங்கள் பண்ணையில் விளைந்த காய்கறி விதைகளை கண்காட்சிகள், 'ஸ்டால்' அமைத்தும் விற்பனை செய்து வருகிறேன்.

என் பண்ணை அமைந்திருக்கும், க.பரமத்தி வட்டாரம், தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதி. அப்படிப்பட்ட இந்த இடத்தை பசுமையாக மாற்றி இருக்கிறேன்.

சொட்டுநீர் பாசன முறையில் சிக்கனமாக பாசனம் செய்கிறேன். பண்ணையில் விழும் மழைநீர் இயற்கையாகவே சேமிக்கப்படுகிறது.

முருங்கை, கொய்யா விவசாயத்தில், 6 லட்சம் ரூபாயும், காய்கறிகள், கீரை வாயிலாக, 2 லட்சம், விதை உற்பத்தி வாயிலாக, 4 லட்சம், நெல்லி, தேக்கு, தீக்குச்சி மரங்கள் வாயிலாக, 1 லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு, 13 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் அனைத்து செலவுகளும் போக, 10 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கிறது.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், வேளாண் பல்கலைக் கழகத்தில் பண்ணை தொழில்நுட்பத்தில், பி.டெக்., படித்து முடித்தேன். நாற்றங்கால் தொழில்நுட்பம், மூலிகை பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம் என, அடுத்தடுத்து ஆறு மாத படிப்புகளை படித்து முடித்தேன்.

இப்படி தொடர்ந்து ஏதாவது ஒன்றை கற்று வருகிறேன். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, வருமானத்தை பெருக்குவதற்கான வழிகளை தேடினேன்.

அப்படி தேடியதால் தான், இன்று இயற்கை விவசாயத்தில் நல்ல வருமானம் பார்த்து, மற்றவர்களுக்கு உந்து சக்தியாக இருக்க முடிகிறது!

தொடர்புக்கு

94430 08689





      Our Apps Available On




      Dinamalar

      Follow us