/தினம் தினம்/சொல்கிறார்கள்/ கணவர், மனைவி ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்! கணவர், மனைவி ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்!
கணவர், மனைவி ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்!
கணவர், மனைவி ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்!
கணவர், மனைவி ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்!
PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

பிரபல நடிகை தேவயானி: நான் இயக்கிய, கைக்குட்டை ராணி என்ற குறும்படம் ஓர் அப்பாவுக்கும், சின்ன பொண்ணுக்கும் இருக்கிற, 'பாண்டிங்' குறித்த, அழகான குறும்படம்.
இது என், 'பேபி ஸ்டெப்' என்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் அருளால் சரியான வாய்ப்பு கிடைத்தால், எதிர்காலத்தில் திரைப்படமும் இயக்குவேன்.
என்னை பொறுத்தவரை, 'ஸ்டேஜ் பை ஸ்டேஜ்' நமக்கு வயது ஆகிட்டு தான் இருக்கும். சினிமா, 'இண்டஸ்ட்ரி'யில நான் நடிக்க ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகின்றன. நாம் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்பதைவிட, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுதான் விஷயம்.
அதனால் கதைக்கு முக்கியத்துவம் இருக்கிற கதாபாத்திரமாக இருந்தால், நான் நிச்சயம் அம்மாவாகவும் நடிப்பேன்.
மாண்டிசோரி கோர்ஸ் முடித்து விட்டு, என் மகள்கள் படித்த பள்ளியிலேயே நானும் பார்ட் டைம் டீச்சராக வேலை பார்த்தேன். ஆனால், முழுநேர நடிகை என்பதால், என்னால் அதைத் தொடர முடியவில்லை.
வாழ்க்கையில் நிறைய வசதி வாய்ப்புகள், கஷ்டங்கள் என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அதனால் எது வந்தாலும் நாம், நாமாக இருப்பதுதான் எதார்த்தம். பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகள் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.
சிலம்பம் நம் தமிழகத்தின் பாரம்பரியமான கலை என்பதால், கொரோனா சமயத்தில், நாங்கள் ஊரில் இருக்கும்போது ஒரு சிலம்ப ஆசிரியரை வீட்டுக்கு வரவழைத்து, என் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்தேன்.
பாலியல் வன்கொடுமை எங்கு நடந்தாலும் மிகப்பெரிய குற்றம் தான். இப்படியெல்லாம் இனி நடக்கவே கூடாது என்பது தான், எல்லார் மாதிரியும் என் எதிர்பார்ப்பும், வேண்டுதலும்... பெற்றோர், தங்களது குழந்தைகளை தைரியமாக வளர்க்க வேண்டும். எது நடந்தாலும் பெற்றோரிடம் மறைக்காமல் கூறும் சூழலை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு, குழந்தைகள் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர் தான் குழந்தைகளுக்கு முதல் மற்றும் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள், தங்கள் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் கூறுவர்.
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி... கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
அதுதான் முக்கியம். ஒருவர் இன்னொருவருக்கான இடைவெளியை தவறாமல் கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். இதெல்லாம் மிகவும் முக்கியம்.