Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ இருளர்களின் அன்புக்காக எவ்வளவு துாரமும் ஓடலாம்!

இருளர்களின் அன்புக்காக எவ்வளவு துாரமும் ஓடலாம்!

இருளர்களின் அன்புக்காக எவ்வளவு துாரமும் ஓடலாம்!

இருளர்களின் அன்புக்காக எவ்வளவு துாரமும் ஓடலாம்!

PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக, இருளர் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் ஆக்னஸ் அமுதா: நான் பிறந்து, வளர்ந்தது சென்னை தான். படிக்கும்போதே, ஆதரவற்ற மக்களுக்கு என் சேமிப்பில் இ ருந்து, சின்ன சின்ன உதவிகளை செய்து வந்தேன். படிப்பு முடிந்ததும், தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேலாளராக சேர்ந்தேன்.

தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து, சாலையோரத்தில் இருந்த ஆதரவற்ற மக்களை, காவல் துறை உதவியுடன் மீட்டு, மருத்துவ உதவிகள் செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு முறை திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் பகுதிக்கு சென்றிருந்தேன். அங்கு, நிறைய குழந்தைகள் செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்களின் பின்னணியை விசாரித்தபோது தான், இருளர் சமூகம் குறித்து தெரிந்தது.

அவர்களது குடியிருப்புகளுக்கு சென்றபோது, நான் பார்த்த விஷயங்கள் அதிர்ச்சியாக இருந்தன. 13 வயது பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகியிருந்தது; வீடுகளில் விளக்குகள் இல்லை; அடிப்படை தேவைகள் இல்லை; குழந்தைகள் பள்ளி செல்லவில்லை. அவர்களின் வீடே இருண்டு கிடந்தது.

கடற்கரை ஓரம் உள்ள அவர்களின் வீடுகள் அடிக்கடி சேதமடைந்து விடும்; தண்ணீர் வீட்டிற்குள் வந்து விடும். அது போன்ற நேரங்களில் எனக்கு தகவல் வந்ததும், உடனே சென்று அவர்களை பாதுகாப்புடன் மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்ப்பேன்.

அவர்கள் வீடுகளில் மின்சார வசதி இல்லாததால், நண்பர்கள் உதவியோடு, 60 வீடுகளுக்கு, 'சோலார்' விளக்குகள் அமைத்துக் கொடுத்தேன். இதைக் கேள்விப்பட்டு, பலரும் உதவ முன்வந்தனர். இதுவரை, 2,000 இருளர் குடும்பங்களுக்கு சோலார் விளக்குகள் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

செங்கல்பட்டு, திருத்தணி, மாமல்லபுரம், சிறுகுன்றம் உட்பட பல பகுதிகளில், இருளர் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.

படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளுக்கு புத்தகப் பை, உடைகள், சத்தான சாப்பாடு என, எங்களால் முடிந்ததை எல்லாம் கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறோம்.

தன்னார்வலர்கள் வாயிலாக, மாலை நேர இலவச பயிற்சி வகுப்புகள் எடுக்கிறோம். குழந்தை திருமணங்களை முடிந்த வரை தடுத்திருக்கிறோம்.

குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, மருத்துவ உதவிகள், அடிப்படை தேவைகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். இது தனி முயற்சி இல்லை; கூட்டு முயற்சி.

இந்த மக்களின் அன்புக்கு முன்னால், இதெல்லாம் ஒன்றுமில்லை. அந்த அன்புக்காக, எவ்வளவு துாரம் வேண்டுமானாலும் ஓடலாம்!

தொடர்புக்கு: 98415 19111





      Our Apps Available On




      Dinamalar

      Follow us