/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பிடித்து செய்யும் எல்லா வேலையும் கவுரவம் தான்! பிடித்து செய்யும் எல்லா வேலையும் கவுரவம் தான்!
பிடித்து செய்யும் எல்லா வேலையும் கவுரவம் தான்!
பிடித்து செய்யும் எல்லா வேலையும் கவுரவம் தான்!
பிடித்து செய்யும் எல்லா வேலையும் கவுரவம் தான்!
PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

சென்னை, அண்ணா சாலை எல்.ஐ.சி., மெட்ரோ ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள, 'மை பானி பூரி' என்ற தள்ளுவண்டி கடை உரிமையாளர் தன்வீர் பாத்திமா - முகமது யாகுப் தம்பதி:
தன்வீர் பாத்திமா: இருவரும் சென்னையில் ஒரே ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்து வந்தோம். திருமணத்திற்குப் பின் இருவரும் ஒரே கம்பெனியில் தொடர முடியாத சூழலில், வேலையை விட்டு விட்டோம்.
எனக்கு பானி பூரி பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை. சிறுவயதில் நிறைய பானி பூரி கடைகளுக்கு சென்றிருக்கிறேன். பெரும்பாலான கடைகள் சுத்தமாக இருக்காது. இந்த பிரச்னைக்கு, என் பிசினஸ் தீர்வாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிறைய யோசனைகளுக்குப் பின் கிடைத்த பதில்தான், 'ஆட்டோமேட்டிக் பானி பூரி மிஷின்!'
பானி பூரிக்கு தேவையான தண்ணீர், சட்னி எல்லாம் நானே தயார் செய்து விடுவேன். மிஷினில் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் பானி பூரிக்கு தேவையான புதினா ரசம், இனிப்பு ரசம் என தனித்தனியாக நிரப்பி வைக்க வேண்டும். அதன்பின் வாடிக்கையாளர்கள் எந்த சுவை பானி பூரி கேட்கின்றனரோ, அதற்கான பட்டனை, 'ஆன்' செய்து, பூரியில் ரசத்தை பிடித்துக் கொடுப்போம்.
முகமது யாகுப்: பானி பூரி மிஷின் குறித்து தேடினோம். இதுவரை அப்படி ஒரு மிஷின் ரெடிமேடாக எங்கும் இல்லை என தெரிந்தது. அதனால், ஒரு இன்ஜினியரிடம் எங்கள் தேவைகளை சொல்லி, இந்த மிஷினை செய்து வாங்கினோம். இந்த பிசினஸ் ஆரம்பிப்பதில் எங்களுக்கு சவாலாக இருந்தது இந்த மிஷின் தயாரிப்பு தான்.
பானி பூரி, சாண்ட்விச் என, இப்போது எங்களிடம் ஏழு வகையான ஸ்நாக்ஸ் இருக்கிறது. பிசினஸ் ஆரம்பித்து நான்கு மாதங்கள் தான் ஆகின்றன. 'ஐ.டி., கம்பெனி வேலையை விட்டு விட்டு, சாலையில் நின்றபடி பானி பூரி விற்க வேண்டுமா?' என்று பலர் கமென்ட் செய்வர்; நாங்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. பிடித்து செய்யும் எல்லா வேலையும் கவுரவம்தான்.
தினமும் மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை எங்கள் கடை இயங்குகிறது. தற்போது ஒரு நாளைக்கு 5,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒருநாள் அதிகமாக விற்பனை ஆகும்; ஒருநாள் குறைவாக விற்பனையாகும். ஆரம்பகட்டம் என்பதால், பொருள் மீதமாவதை தடுக்க முடியவில்லை.
அடுத்து பெரம்பூரில் இன்னொரு கடை திறக்க இருக்கிறோம். இன்னும் பல இடங்களில் கடைகள் திறந்து, ஒரு பெரிய பிராண்டாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு!