/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'டர்ன் ஓவரை' ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும்! 'டர்ன் ஓவரை' ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும்!
'டர்ன் ஓவரை' ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும்!
'டர்ன் ஓவரை' ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும்!
'டர்ன் ஓவரை' ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும்!
PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM

வாழை நார் மற்றும் கோரையில் கைவினை பொருட்கள் தயாரித்து, மாதம் 3.50 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்து அசத்தும் நாமக்கல்லைச் சேர்ந்த சுகந்தி:
நான் பிறந்தது, தர்மபுரி மாவட்டம் பி.துரிஞ்சிப்பட்டி. எனக்கு ஆசிரியர் ஆக ஆசை. ஆனால், பிளஸ் 2 முடித்ததும் திருமணமாகி விட்டது. ஆனாலும், என் கனவை விட்டு விடக்கூடாது என்பதற்காக, லேப் டெக்னீஷியன், டீச்சர் டிரெய்னிங், பி.எட்., - பி.லிட்., - எம்.ஏ., தமிழ் என்று அடுத்தடுத்து படித்து முடித்தேன்.
கடந்த 2018ல், பிரபல தனியார் வங்கியின் சார்பு நிறுவனத்தில், 35,000 ரூபாய் சம்பளத்தில் டெவலப்மென்ட் ஆபீசராக சேர்ந்தேன். தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆபீசராக இருந்தேன்.
விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்களை கொண்டு சேர்ப்பது தான் என் பணி. அப்போது தான் நாமக்கல் மாவட்டம், மோகனுாரை சுற்றியுள்ள கிராமங்களில் வாழை மற்றும் கோரை புற்கள் அதிகம் பயிர் செய்யப்படுவதை பார்த்தேன்.
அங்கு வாழை விவசாயிகள், வாழைத்தார்களை வெட்டிய உடன் வாழை மரங்களை வெட்டி அழித்து விடுவர். அதை வருமானமாக்குவது எப்படி என்று யோசித்து தான், 2022ம் ஆண்டில், 5 லட்சம் ரூபாய் முதலீட்டில், இந்த பிசினசை ஆரம்பித்தேன்.
வாழை நார் பிரித்தெடுக்க, கைத்தறி நெசவுக்கு, தையலுக்கு என தனித்தனியே மூன்று இயந்திரங்களை வாங்கினேன். மோகனுாரைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு ஏற்கனவே நான் நன்கு அறிமுகமாகி இருந்ததால், அவர்கள் வாழை மரங்களை தர முன் வந்தனர்.
இந்த தொழில் குறித்து முன் அனுபவம் இல்லாததாலும், இணையதளத்தில் தேடி படித்தும் பல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டேன்.
ஆபீஸ் பைல், லஞ்ச் பேக், பென்சில் பவுச், ஹேண்ட் பேக், கலை ஓவியம், ரிட்டர்ன் கிப்ட் பேக், பொக்கே, கூடைகள் என்று வாழை நாரில் பல பொருட்களை உருவாக்க துவங்கினோம். இதே பொருட்களை கோரையிலும் செய்ய துவங்கினோம்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வாயிலாக பல மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா, டில்லி என்று மற்ற மாநிலங்களிலும் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்று, ஸ்டால் போடுவது என்று மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தோம். இதனால், எங்களுக்கு இந்தியா முழுக்க, 15 டீலர்கள் கிடைத்தனர்.
மலேஷியாவுக்கு சென்று சாம்பிள் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதனால் அங்கும், அமெரிக்காவுக்கும் எங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இப்போது மாதம் 3.50 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறோம். இதை, 1 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு வைத்து உழைக்கிறோம்.
தொடர்புக்கு:
70108 52960