Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ லாபம் கிடைக்கவில்லை என வருத்தப் பட்டதில்லை!: பிரதமர், முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும்!

லாபம் கிடைக்கவில்லை என வருத்தப் பட்டதில்லை!: பிரதமர், முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும்!

லாபம் கிடைக்கவில்லை என வருத்தப் பட்டதில்லை!: பிரதமர், முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும்!

லாபம் கிடைக்கவில்லை என வருத்தப் பட்டதில்லை!: பிரதமர், முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும்!

PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியில், 14 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாய பண்ணை நடத்தி வரும் கவிதா: எனக்கு பூர்வீகம் கோவை. என் பெற்றோர் டெக்ஸ்டைல் சம்பந்தமான தொழில் செய்துட்டு இருந்தாங்க. நான் சிவில் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். என் கணவர் ரகுநாத் பாரதி; பணி நிமித்தமாக 2012ல் பழனியில் குடியேறினோம்.

நான் பழனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக சில நாட்கள் வேலை பார்த்தேன். வாகன இரைச்சல், புகை, மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியில் வசிக்க பிடிக்காமல், இந்தக் கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவில் உள்ள இந்த வீட்டுக்கு குடிவந்தோம். முதலில் இரண்டு கறவை மாடுகள் வாங்கி வளர்க்க துவங்கினோம்.

பால் வாயிலாக கிடைத்த வருமானம் மிகவும் உதவியாக இருந்தது. அதே ஆண்டு, இந்த வீட்டை சுற்றியுள்ள, 14 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யக்கூடிய வாய்ப்பு அமைந்தது. எனக்கும், கணவருக்கும் விவசாயத்தில் எந்த ஒரு முன் அனுபவமும் கிடையாது. ஏதோ ஒரு நம்பிக்கையில் விவசாயத்தில் இறங்கினோம்.

கடந்த, 2013 முதல் படிப்படியாக இயற்கை விவசாயம் செய்ய துவங்கினோம். ஆண்டிற்கு ஒரு முறை, புரட்டாசி அல்லது கார்த்திகைப் பட்டத்தில், 10 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்வது வழக்கம். துாய மல்லி, தங்க சம்பா, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம், ரத்தசாலி, கருப்புக் கவுனி, இலுப்பைப் பூ சம்பா, ராஜமுடி, கருங்குறுவை உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிர் செய்வோம்.

மேலும், 1.5 ஏக்கரில் 100 தென்னை, 1 ஏக்கரில் 150 கொய்யா, அரை ஏக்கரில், 20 மா மரங்களும் இருக்கு. தென்னையில் பெரும்பாலும் நாங்களாக காய்கள் பறிப்பது இல்லை. தானாக விழும் காய்களை எடுத்து கொப்பரையாக மாத்தி, எண்ணெய் எடுக்கிறோம். எங்கள் தேவைக்கு போக மீதியுள்ள எண்ணெயை மட்டும் விற்பனை செய்வோம்.

வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை, தென்னந்தோட்டத்தில், அரை ஏக்கர் பயிர் பண்றோம். எங்கள் தேவைக்கு போக மீதி காய்கறிகளை மட்டும் விற்பனை செய்வோம்.

வீட்டுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்களும் இந்தப் பண்ணையில் கிடைக்கின்றன. அதே சமயம் அரிசி உள்ளிட்ட பொருட்களை வெளியில் விற்பனை செய்வது வாயிலாக கிடைக்கக்கூடிய வருமானம், சாகுபடி செலவுகளுக்கும், குத்தகை தொகை கொடுப்பதற்கும் சரியாக இருக்கிறது.

பெருசா சொல்லிக்கிற அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை என, ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. காரணம், இயற்கை விவசாயம் செய்வதன் வாயிலாக, ஆரோக்கியமான உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை கிடைச்சுட்டு இருக்கு.

தொடர்புக்கு - 92453 93394.

பிரதமர், முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும்!


சொந்த கற்பனையில், ஆங்கில மொழியில் எழுதிய 12 நீதி நெறி கதைகளை தொகுத்து, 'இனியா ஸ்டோரிஸ்' என்ற புத்தகமாக வெளியிட்ட, தஞ்சாவூர் கு.ராமகிருஷ்ணன் -- ரேவதி தம்பதியின் மகளான, ஐந்தாம் வகுப்பு படிக்கும் இனியா:

பள்ளியில், எப்போதும் முன்னணி மாணவியாக தேர்ச்சி பெற்று விடுவேன். ஓவியப் போட்டி, ஹேண்ட் ரைட்டிங் மற்றும் ஸ்பெல்லிங் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்திருக்கிறேன். மேடை பேச்சுகளிலும் மிகுந்த ஆர்வம் உண்டு.

நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளி ஆண்டுவிழா மேடையில், 'மொபைல் போன் அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்' குறித்து ஆங்கிலத்தில் பேசி, பலருடைய பாராட்டுகளையும் பெற்றேன்.

தமிழ் மொழியின் சிறப்புகள், மரங்கள் வளர்ப்பின் அவசியம், சிறுதானியங்களின் மகத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலும் பேசி கவனம் ஈர்த்துள்ளேன்.

நான் வரைந்த ஓவியங்கள், பிரபல நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. நான்கா-ம் வகுப்பு படித்தபோது, 40 வினாடிகளில், 60 தமிழ் இலக்கிய நுால்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்தேன்.

கோடை விடுமுறையில் படிக்க, என் பெற்றோர் நிறைய கதை புத்தகங்கள் வாங்கி கொடுத்திருக்கின்றனர். அவற்றை படிக்கும்போது தான், எனக்கும் புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதை அம்மாவிடம் கூறினேன்.

நான் கதை எழுத, அம்மாவும் ஊக்கப்படுத்தினார். 'கதைகள் நன்றாக இருந்தால், புத்தகமாக போடலாம்' என்றார். நான் நன்றாக ஓவியம் வரைவதால், கதைக்கு ஏற்ற ஓவியத்தையும் என்னையே வரைய சொன்னார்.

என் பொழுதுபோக்கு புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல், செல்ல பிராணிகளுடன் விளையாடுதல் தான். பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை.

மிகவும் இளம் வயதிலேயே நான் நிகழ்த்தியிருக்கும் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மென்மேலும் புத்தகங்கள் எழுத வேண்டும் என்பதும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதும் தான் என் லட்சியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us